/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் வாரியத்தில் புதிய பிரிவு அலுவலகங்கள் மின் கணக்கீடு மாதம் மாற்றம்
/
மின் வாரியத்தில் புதிய பிரிவு அலுவலகங்கள் மின் கணக்கீடு மாதம் மாற்றம்
மின் வாரியத்தில் புதிய பிரிவு அலுவலகங்கள் மின் கணக்கீடு மாதம் மாற்றம்
மின் வாரியத்தில் புதிய பிரிவு அலுவலகங்கள் மின் கணக்கீடு மாதம் மாற்றம்
ADDED : செப் 24, 2025 11:25 PM
உடுமலை: உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்தில், பாப்பான்குளம், குறிச்சிக்கோட்டை பிரிவு அலுவலகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் கணக்கீடு மாற்றம் குறித்து மின் வாரியம் அறிவித்துள்ளது.
மடத்துக்குளம் கிராமியம் தெற்கு பிரிவு அலுவலகம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பிரிவு அலுவலகங்களிலுள்ள ரெட்டிபாளையம், பாப்பான்குளம் கிழக்கு, மேற்கு, சாளரப்பட்டி, சாமராயபட்டி மற்றும் பெருமாள்புதூர் ஆகிய பகிர்மானங்கள் மின்நுகர்வோர் வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிதாக பாப்பான்குளம் பிரிவு அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த, சாமராயப்பட்டி, பாப்பான்குளம் கிழக்கு, மேற்கு ஆகிய பகிர்மானங்களுக்குட்பட்ட மின் இணைப்புகள் தொடர்ந்து ஒற்றைப்படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படும்.
இரட்டைப்படை மாத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த, ரெட்டிபாளையம் பகிர்மானத்திற்குட்பட்ட மின் இணைப்புகள் தொடர்ந்து, அந்தந்த மாதங்களிலேயே கணக்கீடு செய்யப்படும். அந்தந்த பகுதியில் உள்ள மின்நுகர்வோர், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து உரிய காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலும், ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த பெருமாள்புதுார் , சாளரப்பட்டி பகிர்மான மின் இணைப்புகள் இரட்டைப்படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி அக்., 2025 மாதம் கணக்கீடு செய்யப்பட்டு, வரும் நாட்களில் இரட்டை படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படும்.
குறிச்சிக்கோட்டை பிரிவு உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்தில் தளி, வாளவாடி, மானுப்பட்டி, கிராமியம்-மேற்கு, உடுமலை ஆகிய பிரிவு அலுவலகங்களில் உள்ள ஜல்லிபட்டி பகிர்மானத்தின் ஒரு பகுதி, குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், சின்ன குமாரபாளையம் மற்றும் குருவப்பநாயக்கனூர் ஆகிய பகிர்மானங்கள் மின் நுகர்வோர் வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிதாக குறிச்சிக்கோட்டை பிரிவு அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த பகிர்மான மின் இணைப்புகளில், ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த ஜல்லிபட்டி ஒரு பகுதி ( தற்போது காந்திநகர் பகிர்மானம்) மற்றும் பள்ளபாளையம் பகிர்மானம், தொடர்ந்து ஒற்றைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படும்.
இரட்டைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த குறிச்சிக்கோட்டை மற்றும் கொங்கலக்குறிச்சி ஆகிய பகிர்மானங்கள், இனி வருங்காலங்களில் தொடர்ந்து இரட்டைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படும்.
ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த, சின்னகுமாரபாளையம், ஆலாம்பாளையம் ஆகிய பகிர்மானங்கள் இனி வருங்காலங்களில், இரட்டைப்படை மாதங்களுக்கு மாற்றம் செய்து கணக்கீடு செய்யப்படும். அதே போல் இதுவரை இரட்டைப்படை மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு வந்த குருவப்பநாயக்கனூர் பகிர்மானம், இனி வருங்காலங்களில் ஒற்றைப்படை மாதங்களில் மாற்றி கணக்கீடு செய்யப்படும்.
பொன்னேரி உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், கிராமியம் வடக்கு உடுமலை பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பொன்னேரி பகிர்மான மின் இணைப்புகள் நிர்வாக வசதிக்காக, ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்படுவதிலிருந்து, இரட்டைபடை மாதத்திற்கு கணக்கீடு செய்திட மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, செப்., மாதத்தில் கணக்கீடு செய்யப்படும் மின் இணைப்புகள், அக்.,மாதத்திலும் கணக்கீடு செய்யப்படும்.
எனவே, பொன்னேரி பகிர்மானத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் பொன்னேரி பகிர்மானத்திற்குட்பட்ட மின் இணைப்புகள், இரட்டைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்படும், என உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.