/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
/
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 07, 2025 08:08 AM
ADDED : செப் 06, 2025 11:56 PM

திருப்பூர் : முதலீடு, சேவை பணியின் போது செலுத்திய கூடுதல் வரி, உள்ளீட்டு வரியாக ஈடுசெய்ய முடியாமல் கோடிக்கணக்கான ரூபாய் தேக்கமடைந்துள்ளது; முடங்கியுள்ள தொகையை விடுவித்தால், புதிய தொழில் முதலீடு செய்ய உதவியாக இருக்குமென, தொழில்துறையினர் எதிர்பார்பார்க்கின்றனர்.
ஜி.எஸ்.டி., என்ற பெயரில் வரி அறிமுகமான போது, தொழில்துறையினர் புதிய சிரமங்களை சந்தித்தனர்; ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்தின் போதும், அக்குறைபாடுகள் தீர்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், வரவு - செலவு முறையாக கணக்கில் வந்துவிட்டால், கறுப்பு பொருளாதாரம் படிப்படியாக மறைந்துவிட்டது.
புதிய வரிவிதிப்பால், தொழில்துறையினரும், மக்களும் பாதிக்கப்படும் போது, தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வந்தது. வரி செலுத்துவதை காட்டிலும், உள்ளீட்டு வரி - வெளியீட்டு வரியில் ஏற்பட்ட வித்யாசம், அதிக அளவு தொகையை முடக்கியது. இதை பரிசீலித்த அரசு, வரி வித்தியாசம் ஏற்படாத வகையில், அனைத்து இடங்களிலும் 5 சதவீதம் என்ற அறிவிப்பு செய்துள்ளது, நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக வரவேற்றுள்ளனர்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும், கோடிக்கணக்கான ரூபாய், கூடுதல் வரியாக தேங்கியுள்ளது; இக்கட்டான இக்காலகட்டத்தில், தேக்கமடைந்துள்ள, கூடுதலாக செலுத்திய வரித்தொகையை திரும்ப வழங்கினால், புதிய தொழில் முதலீடுகளுக்கு வாய்ப்பாகவும், வழிகாட்டுவதாகவும் இருக்குமென, பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நிலக்கரி மற்றும் லிக்னைட் மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக இருந்தது, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும். அதன்படி, 2070ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறை துறையின், கார்பன் - டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தை 1,5-20 சதவீதம் வரை குறைக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். ஜவுளிப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டு, கைத்தறி பொருட்கள் பயனடையும். பொது சுகாதார நலன்கருதி, புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதம், 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, இத்தகைய வரி உயர்வு மற்றும் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை அதிக விலை கொண்டதாகவும் மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
- அஸ்வின் அரசப்பன்
ஆடிட்டர், திருப்பூர்.
உற்பத்தி மேம்படும்
செயற்கை நுாலிழை மற்றும் துணிக்கான வரி, 12 சதவீதமாக இருந்தது; 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு நெருக்கடிகள் தீரும். ஜவுளித்துறையினர் செலுத்திய கூடுதல் வரி, 'கிரெடிட் லெட்ஜர்'ல், கோடிக்கணக்கான ரூபாய் தேக்கமடைந்துள்ளது; அவற்றை திருப்பி கொடுக்க வேண்டும்.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும்; ஏற்றுமதி வர்த்தகமும் இனி உயரும். செயற்கை நுால் மற்றும் துணி இறுக்குமதிக்கான, தேவையற்ற தரக்கட்டுப்பாட்டு உத்தரவை தளர்த்த வேண்டும். வரி குறைப்பால், பொருளாதாரம் தேக்கமடைவது குறையும்; அதன் எதிரொலியாக, ஆயத்தஆடை விலையும், குறையும்; வர்த்தகம் அதிகரிக்கும்.
- சுனில்குமார்
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி
ஊக்குவிப்பாளர், திருப்பூர்.
மாற்றுவழி வேண்டும்
ஆயத்த ஆடை உற்பத்தி பயனடையும் வகையில், வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் நன்மை பயக்கும். சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வரியும் 12 சதவீதமாக இருந்ததை 5 சதவீதமாக குறைத்துள்ளனர்.
சாய ஆலைகளுக்கு மூலதனமாக உள்ள சாயம், கொமிக்கல் வரி 18 சதவீதமாகவே நீடிக்கிறது. எங்களுக்கு தேவையான சேவைகளுக்கான வரியும் 18 சதவீதமாகவே நீடிக்கின்றது. ஆனால் எங்களது சாய சேவைக்கான வரி 5 சதவீதமாக இருக்கிறது. இதனால் கூடுதல் வரியாக செலுத்திய தொகை கோடிக்கணக்கான ரூபாய் முடங்கியுள்ளது.
பிராசசிங் பிரிவையும் சாய கழிவுநீர் சுத்திகரிப்பையும் மேம்படுத்த புதிய மெஷின்களை நிறுவ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதற்கான இயந்திரங்களில் முதலீடு செய்யும் பொழுது, அவற்றின் ஜி.எஸ்.டி., வரியும் தேக்கம் அடையும்.
சாயம், கெமிக்கல் வரி குறைய வாய்ப்பில்லை என்பதால் சேவை பிரிவில் செலுத்திய முழுமையான வரியையும், இயந்திரங்கள் முதலீட்டுக்கு செலுத்திய வரியையும் விடுவிக்க மாற்றுவழியை விரைவில் கண்டறிய வேண்டும். கூடுதலாக கோடிக்கணக்கான ரூபாயாக செலுத்தி தேங்கியுள்ள ஜி.எஸ்.டி. தொகையை விரைவில் திரும்ப வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ் மனோகரன்
செயலாளர், பெருந்துறை
'சிப்காட்' ஜவுளி பதனிடுவோர் சங்கம்
வாங்கும் திறன் அதிகரிக்கும்
ஜவுளித்துறைக்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளரின் செலவு குறையும். திருப்பூர் குறு, சிறு நிறுவனங்களின் போட்டித்திறன் அதிகரிக்கும். விலை குறையும் என்பதால், வாங்கும் திறன் அதிகரிக்கும். தொழில்துறை வாய்ப்புகள் அதிகரிக்கும். செயற்கை நுாலிழை வரியும் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு என்பது, செலவு குறைப்பு, சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி முன்னேற்றம் ஆகியவற்றின் மூலமாக திருப்பூருக்கு நன்மை அளிக்கும். தற்போதை மறுசீரமைப்பு என்பது, திருப்பூர் உற்பத்தி துறையை பன்மடங்கு வளர்ச்சி பெற ஊக்குவிக்கும்.
- ஸ்ரீதர்
'லகு உத்யோக் பாரதி' திருப்பூர்.
பெரிய மாற்றம் உருவாகும்
ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்திய கூடுதல் வரி, கோடிக்கணக்கில் தேங்கியுள்ளது; பெரிய முதலீடு செய்ய வேண்டிய தொகை, கூடுதல் வரியாக, 'ரீ பண்ட் ' பெற முடியாமல் முடங்கியுள்ளது. இனிமேல் இப்பிரச்னை இருக்காது. உள்ளீட்டு வரியும், வெளியீட்டு வரியும் சமமாக இருப்பதால், பல்வேறு சிரமங்கள் குறையும்.
இருப்பினும், ஏற்கனவே தேங்கியுள்ள, கோடிக்கணக்கான ரூபாயை, எளிமையான முறையில், 'ரீ -பண்ட்'டாக விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முடங்கியுள்ளது; அத்தொகை விடுவிக்கப்பட்டால், புதிய தொழில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மறுசீரமைப்பு தொழில் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்; கறுப்பு பொருளாதாரம் அதிகபட்சம் ஒழிக்கப்படும். நாட்டின் வளர்ச்சியில் பெரிய மாற்றங்கள் உருவாகும்.
- கணேசன்
திருப்பூர் மாவட்ட
'லகு உத்யோக் பாரதி' முன்னாள் தலைவர்