/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அச்சமில்லை... அச்சமில்லை! பிரதமர் மோடி தந்த நம்பிக்கை; ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
/
அச்சமில்லை... அச்சமில்லை! பிரதமர் மோடி தந்த நம்பிக்கை; ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
அச்சமில்லை... அச்சமில்லை! பிரதமர் மோடி தந்த நம்பிக்கை; ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
அச்சமில்லை... அச்சமில்லை! பிரதமர் மோடி தந்த நம்பிக்கை; ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
ADDED : ஆக 16, 2025 10:21 PM

திருப்பூர்; அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பு அடாவடியை, தைரியத் துடன் எதிர் கொண்டு, புதிய வர்த்தக வாய்ப்புகளை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தேடத் துவங்கியுள்ளனர். இதற்கிடையே, ''குறைந்த விலை... நிறைந்த தரம் என்ற தாரக மந்திரத்துடன், தரமான பொருட்கள் உற்பத்தி வாயிலாக உலக சந்தைகளை நாம் ஆள வேண்டும். உள்நாட்டிலேயே, அனைத்து பொருட்களையும் தயாரித்து பயன்படுத்துவோம்... வரலாற்றை எழுத வேண்டிய நேரமிது'' என்ற, பிரதமர் மோடியின் சுதந்திர தினவிழா எழுச்சியுரை, பின்னலாடைத் தொழில்துறையினருக்கு, புதிய உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது.
அமெரிக்கா, நம் தேசத்துக்கு விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி காரணமாக, உலக சந்தைகளில் கொடிகட்டிப்பறக்கும், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஒருவிதமான தயக்கமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் இங்கு வர்த்தகம் மேற்கொண்டுவந்த அமெரிக்க வர்த்தகர்களுக்கும் சிறகுகள் ஒடிந்தது போன்ற உணர்வு.
இருப்பினும், 'இது தற்காலிகம்தான்; இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாக சுமூக உடன்பாடு ஏற்படும்' என்ற நம்பிக்கை தொழில்துறையினர் மத்தியில் நீடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள், தொழிலை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
'தேவையான உதவிகளை செய்ய அரசு தயங்காது' என்ற பிரதமரின் வாக்குறுதியாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதும், புதிய தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் புதிய சந்தை வாய்ப்புகளையும் ஏற்றுமதியாளர்கள் தேடத் துவங்கியுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை, தொழில்துறையினருக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது.
தொழில்துறையினர் நம்மிடம் பகிர்ந்தவை...
சலுகை திட்டம் தேவை மோகன், தலைவர், 'யங் இந்தியா' அமைப்பு, திருப்பூர்:
அமெரிக்க மார்க்கெட் மிகப்பெரிய வர்த்தக மதிப்பு கொண்டது; திருப்பூர் ஏற்றுமதியில், 30 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. இந்நிலையை மாற்ற, தமிழகத்திலும், மின்சார கட்டண மானியம், வரி குறைப்பு சலுகை செய்யலாம். அமெரிக்கா மட்டுமே பிரதானம் இல்லை; இருப்பினும், அமெரிக்க வர்த்தகமும் முக்கியம்தான். பிரதமர் உறுதி அளித்துள்ளபடி, அமெரிக்க வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், சிறப்பு சலுகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
'டியூட்டி டிராபேக்' போதும் விமல்ராஜ், பின்னலாடை ஏற்றுமதியாளர்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிரதமரின் சுதந்திர தின விழா எழுச்சியுரை, புதிய நம்பிக்கையை வழங்குகிறது. அமெரிக்க வரி உயர்வால், திருப்பூரில் பாதிப்பு தென்பட துவங்கிவிட்டது. முன்பெல்லாம், அமெரிக்க வர்த்தகர்களுடன், வரியை பகிர்ந்து கொண்டோம். தற்போது, 50 சதவீதம் என்பதால், வர்த்தக விசாரணை முடங்கியுள்ளது; அந்நாட்டு வர்த்தகர்களும் திகைத்துப் போயுள்ளனர்.
ஆடை விலை திடீரென அதிகரித்தால் எப்படி விற்பது என்று அச்சமடைந்துள்ளனர். வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், திடீரென அதிக அளவு வர்த்தகம் செய்ய முடியாது. அமெரிக்காவுடன் வர்த்தகத்தை தொடர ஏதுவாக, ஜி.எஸ்.டி., - ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், 'டியூட்டி டிராபேக்' போன்ற திட்டங்கள் வாயிலாக, சில மாதங்களுக்கு உதவி செய்ய அரசு முன்வரலாம்.
மத்திய அரசு காப்பாற்றும் கார்த்திக்பிரபு, பின்னலாடை ஏற்றுமதியாளர்:
அமெரிக்கா வரியை உயர்த்தியதால், சிறிய பாதிப்பு இருக்கத்தான் செய்யும். குறிப்பாக, அமெரிக்காவுடன் மட்டும் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தான் அதிகம் பாதிக்கின்றன. வரி உயர்வில், இதேநிலை நீடிக்க வாய்ப்பில்லை; அதுவரை, மத்திய அரசு தலையிட்டு, வர்த்தக உறவை பாதுகாக்க திட்டமிடலாம். வரி உயர்வை சமாளிக்கும் அளவு, மானியம் வழங்கி உதவ வேண்டும். மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க செய்யலாம். மத்திய அரசு, அன்னிய செலவாணியை ஈட்டும் ஏற்றுமதி தொழிலை நிச்சயமாக பாதுகாக்கும்.
தெளிவான வழிகாட்டுதல் சரண், துணை தலைவர், இளம் ஏற்றுமதியாளர்கள் பிரிவு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:
அமெரிக்காவின் வரி உயர்வு நிரந்தரமாக இருக்காது; பொறுமையாக இருங்கள் என்றுதான், அந்நாட்டு வர்த்தகர்கள் கூறிவந்தனர். அபரிமிதமான வரி விதிக்கப்பட்டால், கூடுதல் செலவை பகிர்ந்துகொள்ள வேண்டுமென, தற்போதே குரல்கொடுக்க துவங்கிவிட்டனர். குழப்பத்துக்கு, மத்திய அரசு, நிச்சயம் தெளிவான வழிகாட்டுதல் வழங்கும் என்று நம்புகிறோம்.
புதிய வாய்ப்பு தேடலாம் தருண், தலைவர், பட்டயக் கணக்காளர் சங்கம், திருப்பூர்:
இந்தியாவின் பின்னலாடை உற்பத்தி மையமாக திருப்பூர் உள்ளது. மொத்த வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயில், 30 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. திடீரென வரியை உயர்த்தி வருவதால், திருப்பூர் தொழில் பாதிக்கும். திருப்பூர் ஆடைகளின் விலை அதிகரித்தால், போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாமிடம் இருந்து ஆடைகள் வாங்க துவங்குவர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவுக்கு பதிலாக, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் புதிய சந்தை வாய்ப்பை பெற முயற்சிக்கலாம். இருப்பினும், இடைப்பட்ட காலகட்டத்தில், மத்திய அரசின் உதவி அவசியம்; மத்திய அரசு நிச்சயமாக தொழிலை பாதுகாக்கும் அறிவிப்புகளை வெளியிடும்.
ஏற்றுமதியாளர் உணர்வைமதித்த மத்திய அரசு பெரியசாமி, ஆலோசகர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:
அமெரிக்க வரி உயர்வால், ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் அளவுக்கு, மத்திய அரசு அமைதியாக இருக்காது. தொழில் 'கிளஸ்டர்' வாரியாக ஏற்படும் பாதிப்பு குறித்து, அரசுக்கு தெளிவான அறிக்கை அளித்துள்ளோம். அதை மத்திய அரசு பரிசீலித்ததன் அடையாளமாகத்தான், பிரதமரின் சுதந்திர தினவிழா எழுச்சி உரை அமைந்துள்ளது.