/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எந்த சமயத்திலும் ஏற்ற இறக்கங்கள் இல்லை'
/
'எந்த சமயத்திலும் ஏற்ற இறக்கங்கள் இல்லை'
ADDED : செப் 16, 2025 11:19 PM

திருப்பூர்; 'எல்லா சமயங்களுக்கு தலைவராக திகழ்பவர் சிவபெருமான். எந்த சமயத்திலும் ஏற்ற இறக்கங்கள் இல்லை என்றாலும், பக்குவத்தால் உயர்ந்தவர்களுக்கு உரியது சைவ சமயம்' என, சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட் சார்பில், திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் வாரந்தோறும், செவ்வாய் கிழமை நடைபெற்று வருகிறது.
நேற்றைய சொற்பொழிவில், சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:
மாணிக்க வாசகர், தில்லை ஊருக்கு கிழக்கே ஒரு பர்ணசாலை அமைத்து, சிவயோகத்தில் இருந்தார். இலங்கையை சேர்ந்த மன்னரும், புத்த மத குருவும், தில்லையில் புத்தமதத்தை ஸ்தாபனம் செய்து, தில்லை கோவிலை புத்த கோவிலாக மாற்றுவதாக சூளுரைத்தனர்.
தில்லை வாழ் அடியார்கள், கோவிலில் பணி செய்தோர் அனைவரும் கலக்கமடைந்தனர். அன்று, தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேரின் கனவிலும், நடராஜ பெருமான் எழுந்தருளி, ஊர் எல்லையில் அமர்ந்துள்ள மாணிக்கவாசகப்பெருமானை அழைத்து வருமாறும், மாணிக்கவாசகர் அந்த புத்த குருவுடன் தர்க்க ரீதியாக வாதாடுவார் என்றும், கூறினார்.
இதனால், அந்த 3 ஆயிரம் பேரும், மாணிக்கவாசகரின் இருப்பிடம் சென்று, அவரை தில்லைக்குள் வருமாறு அழைத்தனர். திருப்பெருந்துறையிலேயே, மாணிக்கவாசகரை விட்டுவிட்டு மேலே சென்ற சிவபெருமான், 'நாளை நீ சிதம்பரத்தில் புத்தரை வாதத்தில் வெல்ல வேண்டும்,' என கூறிச்சென்றது மாணிக்கவாசகரின் நினைவுக்கு வந்தது.
உடனே, அவர் தில்லை கோவிலுக்கு சென்று பரம்பொருளை வழிபட்டார். அங்கிருந்த சோழ மன்னர், மாணிக்கவாசகரை பார்த்து வணங்கினார். இதையடுத்து, தர்க்கம் ஆரம்பித்தது.
புத்த மத குரு, புத்தமத அடிப்படைகளை நிலை நிறுத்தி பேசினார்; அதை மாணிக்கவாசகர், அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் மறுத்து, தர்க்கம் செய்தார்.
எல்லா சமயங்களுக்கும் தலைவராக திகழ்கின்ற சிவபெருமான், அந்தந்த பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த சமயங்களை அமைத்திருக்கிறார். ஆகவே, எந்த சமயத்திலும் ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும், பக்குவத்தால் உயர்ந்தவர்களுக்கு உரியது சைவ சமயம்.
அந்த சமயம், வேறு எந்த சமயத்தையும் தானாக தேடிச் சென்று தர்க்க ரீதியாக வெல்வது அல்லது கீழ்நோக்கி அமிழ்த்துவது இல்லை. ஆனால், எங்களுடைய சமயமே சிறந்தது என்று வேறொரு சமயத்தினர் வாதாடுவார்களானால், அதையும் கருத்து முறைப்படி வென்று, சைவ சமயமே சிறந்தது என்கிற உண்மையை நிலை நிறுத்தவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
இவ்வாறு, அவர் பேசினார்.