ADDED : செப் 30, 2025 01:12 AM

சேவூர்; சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,நிலக்கடலையை மறைமுக ஏலத்தில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவ சாயிகள் போராட்டம் நடத்தினர்.
அவிநாசி ஒன்றியம், சேவூரில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று வழக்கம் போல நிலக்கடலை ஏலம் நடந்தது. இந்நிலையில் மறைமுக ஏலத்தை ரத்து செய்து பொதுவெளியில் பகிரங்க ஏலம் விட வலியுறுத்தியும், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாலை, 4:00 மணி வரை ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'கடந்த காலங்களில் பகிரங்க ஏலத்தில் வெளி மார்க்கெட்டில் விற்கும் விலையில் இருந்து ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் வரை மட்டுமே குறைத்து வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து வந்தனர். இதனால் விவசாயிகள் கணிசமான லாபம் அடைந்தனர்.
மேலும், ஏல நாளன்றே அதற்கான தொகையை வியாபாரிகள் செலுத்தி வந்தனர். இதனால், உரிய தொகை விவசாயிகளுக்கு அன்றைய தினமே கிடைத்தது. தற்போது குறைந்தபட்சம் நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஏலத்தில் விடப்பட்ட நிலக்கடலைக்கான தொகை வங்கிக்கு வந்து சேரும் சூழ்நிலை உள்ளது. எனவே, பகிரங்க ஏலத்தில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாஸ்கரன் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அனைத்தும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக மட்டுமே விளை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் சலுகைகள் தரப்பட்டுள்ளது. மறைமுக ஏலத்தில் எந்த வகையிலும், விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை,'' என்றார்.
தொடர்ந்து நடந்த சமாதான பேச்சுக்கு பின், மாலை, 5:00 மணிக்கு ஏலம் துவங்கியது.