/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க.வுக்கு ஓட்டு கிடையாது: இனாம் நில விவசாயிகள் முடிவு
/
தி.மு.க.வுக்கு ஓட்டு கிடையாது: இனாம் நில விவசாயிகள் முடிவு
தி.மு.க.வுக்கு ஓட்டு கிடையாது: இனாம் நில விவசாயிகள் முடிவு
தி.மு.க.வுக்கு ஓட்டு கிடையாது: இனாம் நில விவசாயிகள் முடிவு
ADDED : நவ 17, 2025 02:00 AM

பல்லடம்: 'பாதிக்கப்பட்ட இனாம் நில விவசாயிகளுக்கு நில உரிமையை தமிழக அரசு மீட்டு தராவிட்டால், தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்று பல்லடம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், 650 ஏக்கர் இனாம் நிலங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கையால் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டது. நேற்று இங்குள்ள அல்லாளபுரம் கிராமத்தில், ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: தமிழக அரசால், 1962ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி பட்டா வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் பட்டா வழங்காமல் விடுபட்ட நிலங்கள் என, 650 ஏக்கர் நிலங்கள், அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இனாம் நிலங்கள் மீது, அந்தந்த மாநில அரசுகளால் சட்டம் இயற்றப்பட்டு, பட்டா வழங்கப்பட்டது. இதேபோல், தமிழகத்திலும் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்வது, ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி மிரட்டுவது உள்ளிட்ட வேலைகளை, அறநிலையத்துறை செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும், 13 லட்சம் ஏக்கர் நிலங்களை, அறநிலையத்துறை பூஜ்ஜிய மதிப்பு செய்துள்ளது. இதனால், 60க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் நில உரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஏற்கனவே பட்டா பெற்ற மற்றும் பட்டா பெறாமல் விடுபட்டவர்களுக்காக புதிய சட்டம் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு நில உரிமையை மீட்டு தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேறாவிட்டால், 'எங்கள் ஓட்டு உங்களுக்கு(தி.மு.க.) இல்லை' என்ற பிரசாரத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

