/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்நாடகாவுக்கு கலப்பட நெய்: அவிநாசி குடோனுக்கு சீல் உரிமையாளர், மேலாளர் தலைமறைவு
/
கர்நாடகாவுக்கு கலப்பட நெய்: அவிநாசி குடோனுக்கு சீல் உரிமையாளர், மேலாளர் தலைமறைவு
கர்நாடகாவுக்கு கலப்பட நெய்: அவிநாசி குடோனுக்கு சீல் உரிமையாளர், மேலாளர் தலைமறைவு
கர்நாடகாவுக்கு கலப்பட நெய்: அவிநாசி குடோனுக்கு சீல் உரிமையாளர், மேலாளர் தலைமறைவு
ADDED : நவ 17, 2025 02:03 AM

திருப்பூர்: கலப்பட நெய் தயாரித்து, கர்நாடகாவுக்கு சப்ளை செய்துவந்த, அவிநாசியில் உள்ள ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன் உரிமையாளரையும், மேலாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனப்படும் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் விற்கப்படுகிறது. இந்த பெயரில் போலி மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாநில போலீசார் வாகன தணிக்கை செய்து விசாரித்தனர். அதில், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு குடோனில் போலி கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்ற முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 1.26 கோடி ரூபாய், 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் ஆகியவன பறிமுதல் செய்யப்பட்டன.
தயாரிப்பு அம்பலம் இச்சூழலில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்த போது, கலப்பட நெய் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டதும், சப்ளை செய்யப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் கோவை மாவட்டம், பொள்ளாச்சி; திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் விசாரணை நடத்தியது. அவிநாசி, நம்பியாம்பாளையம், ஆலங்காட்டுப்பாளையத்தில் ஒரு தோட்டத்து குடோனில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. குடோனை வாடகைக்கு எடுத்து, சிவகுமார் என்பவர், கலப்பட நெய் தயாரித்துள்ளார். இதற்கான 'ஸ்டிக்கர்'கள், பொள்ளாச்சியில் அச்சிடப்பட்டு, பேக்கிங் செய்து 'சப்ளை' செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குடோனை, மேலாளர் ரம்யா என்பவர் கவனித்து வந்தது தெரிந்தது.
பெங்களூர் தனிப்படை போலீசார், அவிநாசி தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் கவுரி ஆகியோர் தலைமையில் குடோனில் சோதனை செய்தனர். அங்கிருந்த மெஷின், எண்ணெய், கலப்பட நெய், இரண்டு வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.
இருவர் தலைமறைவு போலீசார் கூறுகையில், ''சிவகுமார், ரம்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
கடந்த, இரு ஆண்டுகளாக அவிநாசியில் மெஷின்களை நிறுவி, கலப்படம் செய்துவந்துள்ளனர். நெய்யில், தேங்காய் எண்ணெய், பாமாயில், டால்டா என, தேவைக்கு ஏற்ப கலப்படம் செய்து, அதை பேக்கிங் செய்து புழக்கத்தில் விட்டது தெரிந்தது.
இந்த நபர்கள், தமிழகத்திலும், இதுபோன்று ஏதாவது கலப்படம் செய்துள்ளனரா என்ற கோணத்திலும் உள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்'' என்றனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சரவணகுமாரிடம் கேட்டதற்கு, ''சிவகுமார் மூலம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்டதா என்று விசாரித்து வருகிறோம். கலப்பட நெய் சப்ளையானது தெரிந்தால், கடும் நடவடிக்கை பாயும்'' என்றார்.

