/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 26, 2025 09:38 PM
உடுமலை:
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், அரசு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும், ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்களை தங்க வைப்பதற்காக, 52 நிவாரண முகாம்கள் அமைக்கவும், இம்முகாம்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை பேரிடர் காலங்களில் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில், வரும் அக்.,1 முதல், வெள்ள கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உரிய அலுவலர்களை நியமிக்கவும், வெள்ள சேதம் கால்நடை இறப்பு போன்ற பேரிடர்களை உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
திருமூர்த்தி அணை, அமராவதி அணை, உப்பாறு அணை ஆகிய அணைகளில், நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், அணையின் கொள்ளளவு ஆகியவற்றையும், வடகிழக்கு பருவமழை காலங்களில், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் கால்வாய்களில் வெளியேற்றும் போது கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு முன்கூட்டியே தெரிவித்து, பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பேரிடரின் போது, பொது கட்டடங்களை, சிறப்பு முகாம்களாக பயன்படுத்தும் வகையில், மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்கள், போதிய அளவில் உள்ளதையும், தகுதியானதா என அதிகாரிகள் முன்னதாகவே ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைப் புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளில் பொதுமக்கள் சிறுவர் சிறுமியர் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க, நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெச்சரிக்கை விளம்பர பலகையினை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், அவசரகால கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், 1077 மற்றும் 0421--297199 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.