/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சபர்மதி நதி போல் நொய்யலும் மாறும்'
/
'சபர்மதி நதி போல் நொய்யலும் மாறும்'
ADDED : ஆக 19, 2025 01:58 AM

பல்லடம்; ''சபர்மதி நதி போல் நொய்யல் நதியும் நிச்சயம் மாறும்'' என, நொய்யல் ஆறு தண்ணீருக்கான இயக்க துவக்க விழாவில், பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நொய்யல் ஆறு தண்ணீருக்கான இயக்க துவக்க விழா; முன்னாள் விவசாய சங்க தலைவர் பழனிசாமி பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தன. மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேசியதாவது:
துாய்மையாக இருந்த நொய்யல் நதி மாசடைந்ததற்கு முக்கிய காரணம், சாக்கடை கழிவு நீர் கலக்கப்படுவதே ஆகும். மாநில அரசு மனம் வைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
வெளிநாடுகளில், எங்குமே விதிமுறை மீறி பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதில்லை. அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாமல், நொய்யல் நதியை மீட்பது கடினம். நொய்யல் நதியை மீட்கும் முயற்சியாக, மத்திய வேளாண்துறை மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர்களை இங்கு வரவழைக்க தயாராக உள்ளேன்.
அத்திக்கடவு - -அவிநாசி திட்டம் எவ்வாறு நிறைவேறியதோ, அதுபோல் விவசாயிகள் கையில் எடுத்துள்ள இத்திட்டம் நிச்சயம் நிறைவேறும். குஜராத் மாநிலத்தில் சாக்கடையாக இருந்த சபர்மதி ஆறு, சந்தன மணத்துடன் எப்படி மாறியதோ, அதுபோல், நம் நாட்டின் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட தலைவர்களால் நொய்யல் நதியும் நிச்சயம் மாற்றம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.