/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறக்கப்படாமல் பாழாகும் கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
திறக்கப்படாமல் பாழாகும் கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திறக்கப்படாமல் பாழாகும் கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திறக்கப்படாமல் பாழாகும் கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 02, 2026 05:51 AM

உடுமலை: கிராம சேவை மைய கட்டங்கள் திறக்கப்படாமல், பாழாகி, சமூக விரோத செயல்களின் மையமாக மாறியும், ஊரக வளர்ச்சித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களை அதிருப்தியடையச்செய்துள்ளது.
மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தினர், அரசின் இ-சேவைகளுக்காக மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வேண்டியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு திட்டத்தில், ஊராட்சிதோறும் கிராம இ-சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.
இம்மையத்தில், மின்கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்துதல், பல்வேறு சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, மைய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே, பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சில ஊராட்சிகளில், இ-சேவை மைய கட்டடங்கள் ஊராட்சி அலுவலகமாகவும், இதர பயன்பாட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன.
சில ஊராட்சிகளில், அம்மைய கட்டடங்கள், பகலிலும், இரவிலும், 'குடி'மகன்கள் கூடாரமாகவும், இதர சமூக விரோத செயல்களின் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மக்கள் நகருக்கு அலைக்கழிக்கப்பட்டும், அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாழாகியும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கிராம வளர்ச்சி பணிகளை கண்காணிக்கும், மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கட்டடங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறும் முன் திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

