UPDATED : நவ 18, 2026 08:14 PM
ADDED : நவ 18, 2026 08:14 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கேபிள் மற்றும் தொலைதொடர்பு ஒயர்களை, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வரும் 25ம் தேதிக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் கேபிள் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் சாலைகளின் மையத் தடுப்புகள் மற்றும் தெருவிளக்கு கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் ஆபத்தையும் இடையூறையும் ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதனால், கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனங்கள் தங்களது ஒயர்களை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் வரும் 25ம் தேதிக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும். தவறினால், 25ம் தேதி முதல் ஒயர்களைத் துண்டித்து அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் என இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கமிஷனர் கூறியுள்ளார்.
