/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்'
/
வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்'
ADDED : பிப் 14, 2024 11:57 PM
திருப்பூர் : உடற் பயிற்சியின் முக்கியத்துவம்; உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும்ம் 'நம்ம திருப்பூர் மராத்தான்' அனைவரும் பங்கேற்க, யங் இந்தியன்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
யங் இந்தியன்ஸ் மற்றும் சி.ஐ.ஐ., சார்பில், 'நம்ம திருப்பூர் மராத்தான்' நிகழ்ச்சி, வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 'யங் இந்தியன்ஸ்' அமைப்புடன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், போலீஸ், ஐவின் டிராக் ஆகியவை கரம்கோர்த்துள்ளன. திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் அருகே உள்ள ஐவின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் ல் இருந்து, மாரத்தான் துவங்குகிறது. மூன்று பிரிவுகளாக ஓட்டம் நடைபெறுகிறது.
யங் இந்தியன்ஸ் திருப்பூர் தலைவர் நிரஞ்சன், துணை தலைவர் மோகன்குமார் கூறியதாவது:
நம் நாட்டில், 64 சதவீதம் பேர், எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை. உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியமின்மையால், மக்கள், பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாகி, தவறான முடிவு எடுக்கின்றனர். நாட்டின் பின்னலாடை உற்பத்தி தலைநகரான திருப்பூரில், பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுளளனர்.
இச்சூழலில், உடல் ஆரோக்கியம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மராத்தான் மிகவும் அவசியமாகிறது. யங் இந்தியன்ஸ் சார்பில், திருப்பூரில் கடந்த 2017 ல் முதல் மாரத்தான்; 2018ல் இரண்டாவது மாரத்தான் நடத்தப்பட்டது.
'ஓடு... ஓடு உனக்காக ஓடு; உடல் நலத்துக்காக ஓடு' என்கிற தலைப்பில், தற்போது, மூன்றாவது மராத்தான், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. சிறுவர், பெரியவர், பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல் மராத்தான் துவங்கும்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எஸ்.பி., அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். போலீஸ் கமிஷனர் தலைமையில், மாநகர போலீசார், 70 பேர் மாரத்தானில் பங்கேற்கின்றனர். முதன்முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக ஓட்டம் நடைபெற உள்ளது.

