/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபத்திருவிழாவுக்கு பஞ்சகவ்ய விளக்குகள் இது புதுசுங்க!சுற்றுச்சூழலுக்கு உகந்ததால் மக்கள் வரவேற்பு
/
தீபத்திருவிழாவுக்கு பஞ்சகவ்ய விளக்குகள் இது புதுசுங்க!சுற்றுச்சூழலுக்கு உகந்ததால் மக்கள் வரவேற்பு
தீபத்திருவிழாவுக்கு பஞ்சகவ்ய விளக்குகள் இது புதுசுங்க!சுற்றுச்சூழலுக்கு உகந்ததால் மக்கள் வரவேற்பு
தீபத்திருவிழாவுக்கு பஞ்சகவ்ய விளக்குகள் இது புதுசுங்க!சுற்றுச்சூழலுக்கு உகந்ததால் மக்கள் வரவேற்பு
ADDED : நவ 02, 2025 08:40 PM

உடுமலை: கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சபரிமலை சீசனையொட்டி, அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் உடுமலை பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இந்தாண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பஞ்சகவ்யா விளக்குகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அகல் விளக்குகள் தயாரிப்பு, பாரம்பரியமாக பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, புக்குளம், ஜல்லிபட்டி, கண்ணமநாயக்கனுார், மரிக்கந்தை, பூளவாடி, சாளையூர் உள்ளிட்ட கிராமங்களில், மண்பாண்ட தொழிலாளர்கள், இவ்வகை விளக்குகள் உற்பத்தியை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோதவாடி, கொழுமம் உள்ளிட்ட குளங்களில் இருந்து மண் எடுத்து வந்து, இவ்வகை விளக்குகளை தயாரிக்கின்றனர்.
மண் எடுக்க அனுமதி பெறுவதில் தாமதம்; மழைக்காலத்தில் விளக்குகளை காய வைப்பதில் சிரமங்களை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்தாண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த, பஞ்சகவ்யா விளக்குகள் உற்பத்தியும் உடுமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகை விளக்குகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாகவும், திருவிழாவுக்கு முன்னதாகவே ஆர்டர்கள் பெறப்படுவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சகவ்யா விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், பாப்பன்குளம் பகுதியை சேர்ந்த இந்துமதி கூறியதாவது:
நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி, பஞ்சகவ்யா விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. மாட்டுச்சாணம், கோமியம், நெய், தயிர், பால் ஆகியவற்றை கொண்டு, பஞ்சகவ்யம் தயாரிக்கிறோம்.
அதை மூலப்பொருளாக கொண்டு, விளக்குகள் மற்றும் சாம்பிராணியை உற்பத்தி செய்கிறோம். திருக்கார்த்திகை மற்றும் சபரிமலை சீசனையெட்டி, இவ்விளக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
பனிக்காலத்தில், வீடுகளில் இவ்வகை விளக்குகளை ஏற்றுவதால், உருவாகும் நறுமணம் மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். எவ்வித ரசாயன பொருட்களும் விளக்குகள் தயாரிப்புக்கு பயன்படுத்துவதில்லை. இந்த விளக்குகளையும் எரித்து, அதில் பெறப்படும் சாம்பலை விபூதியாகவும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.
தற்போது பஞ்சகவ்யா விளக்கு ஒன்று, 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய, கிராமப்புற தொழிலாக மேற்கொள்ளப்படும் பஞ்சகவ்யா உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும். குறிப்பாக, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

