/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டளை நில விவகாரத்தால் முடங்கிய சொத்துகள்! அறநிலையத்துறையால் குழப்பம்; மக்கள் தவிப்பு
/
கட்டளை நில விவகாரத்தால் முடங்கிய சொத்துகள்! அறநிலையத்துறையால் குழப்பம்; மக்கள் தவிப்பு
கட்டளை நில விவகாரத்தால் முடங்கிய சொத்துகள்! அறநிலையத்துறையால் குழப்பம்; மக்கள் தவிப்பு
கட்டளை நில விவகாரத்தால் முடங்கிய சொத்துகள்! அறநிலையத்துறையால் குழப்பம்; மக்கள் தவிப்பு
ADDED : பிப் 20, 2024 05:26 AM
அவிநாசி: 'அவிநாசியில், கட்டளை நிலம் பதிவு செய்வதில், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் செய்த குழப்பத்தால், பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, நாராசா வீதிகளில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். துணிக்கடை, நகைக்கடை, பூக்கடை, பேக்கரி, வங்கி உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளின் நில ஆவணத்தில், க.ச.எண்: 85/டி மற்றும் 85/இ என இரு சர்வே எண்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
'இந்த சர்வே எண்ணில் உள்ள இடம், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டளை நிலமாக இருப்பதால், சொத்தை வாங்குவது, விற்பது உள்ளிட்ட எந்த செயல்களிலும் ஈடுபட முடியாது' என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது.
அறக்கட்டளை சொத்து
அதிர்ச்சியுற்ற பொதுமக்கள், அவிநாசி சார்-பதிவாளரிடம் புகார் தெரிவித்தனர். அவர் கேட்ட விளக்கத்துக்கு, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் அளித்த விளக்கம்:அவிநாசி கிராமம், க.ச.எண்., 85/இ நிலங்கள், திருமுருகன்பூண்டி, திருமுருகநாதர் சுவாமி கோவிலின் உபகோவிலான நஞ்சப்ப செட்டியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது. கடந்த, 1907ல், நஞ்சப்ப செட்டியார் என்பவர், இந்த நிலங்களில் இருந்து பெறப்படும் வருவாயை கொண்டு பல தான தர்ம காரியங்கள் செய்வதற்கென அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து. கோவில் சொத்து பதிவேட்டின் படி, அந்த இடம் நஞ்சப்ப செட்டியார் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்டது.இவ்வாறு, விளக்கம் அளித்துள்ளார்.
அதிர்ச்சியில் மக்கள்
பொதுமக்கள் சிலர் கூறுகையில்,''ஹிந்து சமய அறநிலையத்துறை கூறுவது போன்று அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டளை இடம் என்பது, சர்வே எண் '85/இ' மற்றும் 'டி' ஆகியவற்றில் இருக்கிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 18 சென்ட் இடம் உட்பட அப்பகுதியில் உள்ள மற்ற நிலங்களையும் அந்த கட்டளை நிலத்துக்குள் கொண்டு வந்து ஆவணப்படுத்தியுள்ளனர். இதுதான் குழப்பத்துக்கு காரணம். அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள தடையை நீக்க வேண்டும்,'' என்றனர்.
அவிநாசி சார்-பதிவாளர் ஜெசிந்தா மேரி கூறுகையில், ''இந்த இடத்தை சப்-டிவிஷன் செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் தவிர்த்து, எஞ்சிய பகுதிகளுக்கான தடையை நீக்க வேண்டும் என, திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்; அவர்கள் தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; தடையை நீக்கினால் நிலம் தொடர்பான பிற பணிகளை மேற்கொள்வதில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை,'' என்றார்.
வரையறை செய்ய வேண்டும்
பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது:
இடத்தின் மீது கடன் வாங்க, ஒரு ஆண்டாக முயற்சி செய்தோம். கட்டளை நிலம் என்ற அறநிலையத்துறை கடிதத்தால், வங்கிக்கு எம்.ஓ.டி., செய்ய முடியாது என, சார்-பதிவாளர் கூறி விட்டார். ஏதோ ஒரு இடத்துக்காக, ஒட்டுமொத்த க.ச.எண்ணையும் குறிப்பிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.
பலரும் இதனால், பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தொழில் கடன், அடமான கடன் பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, அறநிலையத்துறை, சர்வே செய்து, எந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்ற தெளிவான வரையறை செய்து, இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தடையை நீக்க பரிந்துரை
திருமுருகநாதர் சுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா கூறியதாவது:
குறிப்பிட்ட இடத்தில் கட்டளை நிலம் தொடர்பான செக்குப்பந்தி இல்லாததால், கோவிலுக்கு சொந்தமான நிலம் எது என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. அதனால் தான் ஒட்டு மொத்த பகுதியும் கட்டளை நிலமாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டது.
'மாநிலம் முழுக்க, கட்டளை நிலங்களை அளந்து, அடையாளம் காண வேண்டும்' என, தனியார் ஒருவர் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி, வரும், 29ம் தேதிக்குள் அந்நிலங்கள் அளக்கப்பட வேண்டும். அவிநாசியில், குழப்பம் ஏற்படுத்திய நிலமும், வருவாய்த்துறையினரால் 'சர்வே' செய்யப்பட உள்ளது. அளவீடு முடிந்த பின், கட்டளை நிலம் தவிர்த்து, எஞ்சிய நிலங்களில் உள்ள தடையை நீக்க பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

