/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது இடத்தில் கட்சி கொடிக்கம்பம்: சுழலுது சாட்டை
/
பொது இடத்தில் கட்சி கொடிக்கம்பம்: சுழலுது சாட்டை
ADDED : டிச 14, 2024 11:38 PM

'பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுவதை ஏன் தடை செய்யக்கூடாது?' என, ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. கட்சிக் கொடிக்கம்பங்களால், இதுவரை நடந்த நிகழ்ந்த விபத்துகள்; பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. கட்சிக் கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் சாட்டையை ஐகோர்ட் சுழற்றியுள்ள அதே தருணம், இதுகுறித்து, திருப்பூரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டோம்.
உணர்வுபூர்வ விஷயம்
கோவிந்தராஜ், தி.மு.க., பகுதி செயலாளர், வீரபாண்டி:கொடிக்கம்பம், கட்சிக்கொடி என்பது, அரசியல் கட்சிகளின் உணர்வுபூர்வமான விஷயம். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்தக் கட்சிக்கும் கிடையாது. இடையூறாக கொடிக் கம்பங்களை வைக்கக்கூடாது என்ற கோர்ட் உத்தரவை மதிக்கிறோம். அதே நேரம், உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் வைக்க வழிவகை செய்ய வேண்டும்; அனுமதி கேட்டு, கட்சியினர் வழங்கும் விண்ணப்பங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையினர் விரைவில் அனுமதி வழங்க வேண்டும்.--
அடையாளமே கொடிதான்
குணசேகரன், அ.தி.மு.க., ஜெ., பேரவை மாநில இணை செயலாளர்:ஒரு கட்சிக்கு, கொடி என்பது மிகவும் அவசியம்; கட்சியின் அடையாளமே கொடி தான். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக் கம்பங்கள் வேறு இடத்துக்கு மாற்ற, சம்பந்தப்பட்ட அரசுத்துறையினர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, மாற்றிடம் வழங்க வேண்டும். அனுமதி பெற்று பட்டா நிலத்தில் கொடிக்கம்பம் வைக்க அனுமதியுண்டு. சில கட்சிகள், 100 அடி உயரத்துக்கு கூட கொடிக்கம்பம் வைக்கின்றன; இதை தவிர்த்து, 20 அடிக்குள் வைக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.--
உயிர்நாடி போன்றது
மலர்க்கொடி, மாநில செயலாளர், பா.ஜ.,:அரசியல் கட்சிகளுக்கு கொடிக்கம்பம் என்பது உயிர்நாடி போன்றது. கொடிக்கம்பம் வைக்கப்படும் இடத்தில் உயிருக்கு தொந்தரவோ, பிறரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை இருந்தால், அங்குள்ள கொடிக்கம்பம் அகற்றப்பட வேண்டும். அந்த அடிப்படையில், கோர்ட் உத்தரவை மதிக்கிறோம். அதே நேரம், பல இடங்களில் எவ்வளவோ மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வருகின்றன; மின் கம்பம் மற்றும் கம்பிகள் அறுந்து விழுவதால் உயிர்ப்பலி கூட நேரிகிறது; இவற்றை ஒழுங்குப்படுத்துவதும் அவசியம்.---