/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒவ்வொருரிடத்திலும் பெருமாள் இணைந்திருக்கிறார்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி விளக்கம்
/
ஒவ்வொருரிடத்திலும் பெருமாள் இணைந்திருக்கிறார்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி விளக்கம்
ஒவ்வொருரிடத்திலும் பெருமாள் இணைந்திருக்கிறார்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி விளக்கம்
ஒவ்வொருரிடத்திலும் பெருமாள் இணைந்திருக்கிறார்! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி விளக்கம்
ADDED : செப் 18, 2025 11:30 PM

திருப்பூர்; 'ஒவ்வொருரிடத்திலும் பெருமாள் இணைந்திருக்கிறார்,' என புரட்டாசி மாத சிறப்பு உபன்யாஸத்தில், கிருஷ்ணன் சுவாமி குறிப்பிட்டார்.
திருப்பூர், காயத்ரி மஹாலில், புரட்டாசி மாத சிறப்பு உபன்யாஸம் நடந்து வருகிறது. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, ஸ்ரீநிவாச பெருமாளின் 'சேர்த்தி ஒற்றுமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில், அவர் பேசியதாவது:
திருவேங்கடமலையான் பெருமாள், மலையின் மீது, நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அரங்கநாதபெருமாள், ஆற்றங்கரை நடுவில் சயன திருக்கோலத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பினும், அந்த வேறுபாடே தெரியாமல் ஒன்று போல் இருக்கின்றனர்; இதைத்தான் ஒற்றுமை என்கிறோம். ஒற்றுமை நிலவ குறைந்தபட்சம் இரண்டு பேர் இருக்க வேண்டும். உயிரற்ற, மற்றும் உயிருள்ள என இரு வகையுண்டு. அதனுள் இருக்கும் ஆன்மா தான் ஞானம் எனப்படுகிறது.
உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமிடத்திலும் பெருமாள், எப்போதும் ஒன்று கூடி இருக்கிறார்; இணைந்திருக்கிறார். நம்மை விட்டு பெருமாள் பிரிய மாட்டார். அவரை விட்டு நாம் பிரிய மாட்டோம். ஒவ்வொருவரிடமும் ஆத்மா, உடல் என, இரு விஷயங்கள் உண்டு. நமக்கு உடல் மட்டும் தான் இருக்கிறது என்றால், நம்மால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. அதேபோல், ஆத்மா மட்டும் தான் இருக்கிறது என்றால், நாம் பேசவோ, சாப்பிடவோ செயல்படவோ முடியாது. உடலும், ஆன்மாவும் இணைந்தால் தான் முழுமையாக செயல்பட முடியும்.
ஆன்மாவுக்கு அறிவு இருக்கும். ஆனால், கை, கால் போன்ற உறுப்புகள் இருக்காது. உடலுக்கு, ஆன்மா இருக்காது; ஆனால், கை, கால் போன்ற உறுப்புகள் இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்து செயல்பட்டால் தான், நாம் வாழ முடியும். உடலும், ஆன்மாவும் இரண்டு தான் என, நம்மால் கூற முடியாது என்ற போதிலும், அதை உணர முடியும். இதைத்தான் சேர்த்தி ஒற்றுமை என்கிறோம். அதை போலத்தான், ஒவ்வொருவரிடத்திலும் பெருமாள் இணைந்து இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் சொற்பொழிவு ஆற்றினார்.
சொற்பொழிவு நிகழ்ச்சியில் இன்று இரவு, 'அருளின் ஆழம்' என்ற தலைப்பிலும், நாளை மாலை, 'திருநாம மஹிமை' என்ற தலைப்பிலும், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி பேசுகிறார்.