/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு கூட்டத்தில் குறையாத மனுக்கள்
/
குறைகேட்பு கூட்டத்தில் குறையாத மனுக்கள்
ADDED : ஜூலை 28, 2025 10:47 PM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 495 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மகாராஜ், ஜெயராமன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பக்தவச்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
பல்லடம், மாணிக்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பட்டா கேட்டு மனு அளித்தனர்.
நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 495 மனுக்கள் பெறப்பட்டன. துறை சார்ந்த அரசு அதிகாரிகள், மனுக்களை வாங்கி ஓரமாக போட்டுவைக்காமல், தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; குறைகேட்பு கூட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வசதியானோருக்கு பட்டா? பல்லடம் தாலுகா, செம்மிபாளையம் ஊராட்சி மக்கள்: பல்லடம் தாலுகா செம்மிபாளையத்தில், க.ச.எண் 96/2 ஏ ல் உள்ள பூமிதான நிலத்தில், 88 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடும், குளறுபடியும் நடக்கிறது. நீண்ட காலமாக செம்மிபாளையத்தில் வசிக்கும் நிலமற்ற ஏழைகளை புறக்கணித்துவிட்டு, வசதியானவர்களுக்கு பட்டா வழங்க திட்டமிட்டுள்ளனர்.
செம்மிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் அவரது கணவரின் ஆதரவாளர்களுக்கு, இலவச பட்டா வழங்க முடிவு செய்துள்ளனர். பல்லடம் தாசில்தார், சாமளாபுரம் ஆர்.ஐ., செம்மிபாளையம் வி.ஏ.ஓ., ஆகியோர், கள ஆய்வு செய்யாமல், முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் அளித்த பட்டியல் படி, பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர். அதனால், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இலவச பட்டாவுக்கான தவறான பயனாளிகள் பட்டியலை ரத்து செய்யவேண்டும். நிலமற்ற ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என்றனர்.
தடுப்பணைக்கு ரோடு தேவை அவரப்பாளையம் திருநாவுக்கரசு: பல்லடம் தாலுகா கரைப்புதுார் கிராமம், அவரப்பாளையத்தில், தடுப்பணைக்கு செல்லும் ரோடு, முட்புதராக காணப்படுகிறது. மழைக்காலங்களில், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அதிகாரிகளால் தடுப்பணையை பார்வையிட முடிவதில்லை. 500 அடி நீளமுள்ள தடுப்பணைக்கு செல்லும் ரோட்டில், தார் சாலை அமைக்கவேண்டும்.
பல்லாங்குழி ரோடு நா.த.க,. இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார்: ஊத்துக்குளி ஒன்றியம், கூனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 5, 6, 7 வார்டுகளுக்கு உட்பட்ட, அருந்ததியர் காலனி, மேற்குப்புதுார், அம்பேத்கர் காலனி, காமாட்சிபுரம், எக்கனாமிக் நகர் பகுதிகளை இணைக்கும், தார் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியும், ரோடு பணிகளை இன்னும் துவங்கவில்லை. இதுதொடர்பாக ஊத்துக்குளி பி.டி.ஓ.,வுக்கு தபால் அனுப்பியும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையோ, பதிலோ கூட அளிக்கவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றுங்க... திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பினர்: திருப்பூர் மாநகராட்சி 57 வது வார்டு, காளிகுமாரசாமி கோவிலில் இருந்து வள்ளலார் நகர் வரை, ரோட்டின் இருபுறமும் தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
ஒரு மினி பஸ் மட்டுமே! வஞ்சிநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள்: வீரபாண்டி, வஞ்சிநகர் அடுக்குமாடி குடியிருப்பில், 1280 வீடுகள் உள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகிறது. எங்கள் பகுதிக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டுவந்தன. தற்போது ஒரே ஒரு மினிபஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். கூடுதலாக மினிபஸ்கள், வஞ்சி நகர் பகுதிக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.