ADDED : செப் 12, 2025 10:49 PM

திருப்பூர்; ராம் நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழிகளால் ரோடு சேதமடைந்து, வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி ரோட்டில் ராம் நகர், ராமையா காலனி பகுதிகள் அமைந்துள்ளன. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் அதிகளவில் இப்பகுதியில் உள்ளன. மேலும், ஏராளமான பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள் இதன் பிரதான ரோடுகளில் அமைந்துள்ளன.
இதனால், இப்பகுதியில் பெரும்பாலான நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இங்குள்ள கட்டடங்களுக்கு குடிநீர் வழங்க புதிய குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக குழாய்கள் பதிக்க ரோட்டில் பதிக்கப்பட்ட வினியோக குழாயிலிருந்து இணைப்பு வழங்க குழி தோண்டப்பட்டது. குழாய் இணைப்புகள் வழங்கிய பின்னர் மீண்டும் குழிகளை முறையாக மூடவில்லை.
இதனால் ரோடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. வாகனங்கள் பழுதடைவதும் சகஜமாக உள்ளது.
குழாய் பதிக்க தோண்டிய குழிகள் முறையாக மூடி, புதிய ரோடு முறையாகப் போட வேண்டும்.
அதே போல், பாதாள சாக்கடை மேன்ேஹால் மூடிகளும் ரோட்டுக்கு மேல் நீண்டு கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அவற்றையும் முறையாக சீரமைக்க வேண்டும்.