/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்மிக சுற்றுலா மேம்படுத்த திட்டம்
/
ஆன்மிக சுற்றுலா மேம்படுத்த திட்டம்
ADDED : டிச 25, 2025 05:52 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா முக்கியத்துவம் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொழுதுபோக்குக்கு பஞ்சம் நிறைந்த திருப்பூரில், திருப்பூர் - மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது ஆண்டிபாளையம் குளம். நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுற்றுலா தலமாக மாற்றியிருக்கிறது.
ஆண்டிபாளையம் குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், மேம்பாடு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த, தனியாரின் பங்களிப்பை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
படகு குழாமில் படகு சவாரி மேற்கொள்ள, 13 படகுகள் உள்ளன; சிறுவர் பூங்கா, கேன்டீன் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் மேல் தளம், நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய அரங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா நாட்களில், உள்ளூர் மக்கள் ஆண்டிபாளையம் குளத்துக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
மேம்பாடு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த, தனியாரின் பங்களிப்பை அனுமதிப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூரில், ஏராளமான கோவில்கள் உள்ளன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட, வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.அதன்படி, திருப்பூர், ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில் பூங்கா அமைக்க, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ஓய்வு அறை, பக்தர்கள் குண்டம் இறங்கும் தளத்தை ஒட்டியுள்ள தரை தளத்தில், 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊதியூர், உத்தண்ட வேலாயுதசாமி கோவிலில், அணுகுபாதை உள்ளிட்ட பணி மேற்கொள்ள, 2 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கைகள், மாவட்ட சுற்றுலா துறை சார்பில், சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் நிதி ஒதுக்கீடுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
---
ஆண்டிபாளையம் குளக்கரையோரம் உள்ள பூங்கா.

