/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
/
மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
ADDED : செப் 22, 2024 11:55 PM

உடுமலை : உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 10 வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.
குறைந்த தண்ணீர் தேவை, அதிக வருவாய் என மரச்சாகுபடி திட்டமாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அதிகளவு நடவு மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் அருகேயுள்ள மடத்துார், நல்லண்ணகவுண்டன் புதுாரில் உள்ள விவசாயி வினோத்குமாருக்கு சொந்தமான நிலத்தில், 1,300 மகாகனி மரக்கன்றுகளும், தலா, 50 தேக்கு, மூங்கில் என, மொத்தம், 1,400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதே போல், உடுமலை, கணபதிபாளையம் விவசாயி ராஜேந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 250 மகாகனி, 30 சந்தனம், 30 செம்மரம், 20 தேக்கு, 20 குமிழ் மற்றும் இலுப்பை, பலா, மகிழம், மஞ்சள் கடம்பு, மூங்கில் என, 389 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மேலும், குடிமங்கலம், வேலப்பநாயக்கனுார் விவசாயி சின்னத்துரைக்கு சொந்தமான நிலத்தில், 260 மகாகனி, குமிழ், வேம்பு, புங்கன், சந்தனம், தேக்கு என, 335 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசு, உள்ளாட்சி அமைப்புகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மரம் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.