டூவீலர் திருட்டு; மூன்று பேர் கைது
திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டூவீலர் திருட்டு தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் விதமாக பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆண்டிபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான சக்திவேல், 40 என்பவரிடம் விசாரித்தனர். டூவீலர் திருட்டில் ஈடுபட்டது. டூவீலர்களை திருடி, நண்பர்களான தனபாலன், 47, பிரகாஷ் ராஜ், 27 என்பவருக்கு விற்றது தெரிந்தது. திருட்டு வாகனம் என்று தெரிந்து ஆவணங்கள் இல்லாமல் வாங்கியது தெரிந்தது. இதன் காரணமாக, மூன்று பேரை கைது செய்து, இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
சிறுமியிடம் அத்துமீறல்: டிரைவர் கைது
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் மாலை, மூன்று பள்ளி சிறுமிகள் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு போதையில் வந்த லாரி டிரைவர் கனகராஜ், 42 என்பவர், சிறுமிகளை சத்தம் போட்டு, கையை பிடித்து இழுத்தார். தொடர்ந்து தடுக்க முயன்ற மற்ற சிறுமிகளையும் கையால் தாக்கினார். புகாரின் பேரில், கனகராஜை 'போக்சோ'வில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பெண் தற்கொலை: வாலிபர் கைது
பொங்கலுார், சோழியப்ப கவுண்டம்புதுாரில் வசிப்பவர் சிவரஞ்சித்; இவரது மனைவி முத்துலட்சுமி, 23. இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி. அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதில் அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் முத்துலட்சுமி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அஜித்குமார் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முத்துலட்சுமியின் கணவருக்கு அனுப்பியுள்ளார். மனமுடைந்த முத்துலட்சுமி கடந்த 21ல் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்குக் காரணமான அஜித்குமாரை,23 அவிநாசி பாளையம் போலீசார் கைது செய்தனர்.
டூவீலர் மோதி டெய்லர் பலி
பொங்கலுார் அருகே கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 72, டெய்லர். இவர் திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்பாளையத்தில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, திருப்பூரில் இருந்து கொடுவாய் நோக்கி சென்ற டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்து அதேயிடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

