/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசியல் கட்சிகளின் செயல்பாடு,, பொறுப்பின்மை! நெரிசல் இடங்களில் பொதுக்கூட்டம்
/
அரசியல் கட்சிகளின் செயல்பாடு,, பொறுப்பின்மை! நெரிசல் இடங்களில் பொதுக்கூட்டம்
அரசியல் கட்சிகளின் செயல்பாடு,, பொறுப்பின்மை! நெரிசல் இடங்களில் பொதுக்கூட்டம்
அரசியல் கட்சிகளின் செயல்பாடு,, பொறுப்பின்மை! நெரிசல் இடங்களில் பொதுக்கூட்டம்
ADDED : செப் 29, 2025 12:27 AM

திருப்பூர்; திருப்பூரில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட் டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்த, மக்கள் கூடும் பிரதான இடங்கள், வாகன நெரிசல் உள்ள இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை திறந்தவெளி மைதானம் அல்லது திடல் பகுதிகளில் நடத்தினால், பொதுமக்களின் சிரமங்கள் தவிர்க்கப்படும்; அசம்பாவிதங்களும் நேராது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கரூரில் நேற்றுமுன்தினம் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 40 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள், அரசு துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உள்ளது.
திருப்பூரில் அரிசி கடை வீதி; மாநகராட்சி சந்திப்பு; காட்டுவளவு; சி.டி.சி கார்னர்; குமரன் நினைவிடம், யூனியன் மில் ரோடு ஆகிய பகுதிகள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
மாநாடு மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு அரசியல் கட்சியினர் புறநகர் பகுதியை நாடிச் சென்று விடுகின்றனர்.
சாலை அடைப்பு
அரிசி கடை வீதியில் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் போது, முக்கிய கடை வீதி, மார்க்கெட் மற்றும் கோவில்களுக்கு செல்ல முடியாமல் ரோடு அடைக்கப்படும். மாநகராட்சி சந்திப்பில் கூட்டம் கூடும் போது, போலீசார் போக்குவரத்தை திருப்பி விடும் நிலை ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி மற்றும் முக்கிய கடை வீதிகள் வழியாக வந்து செல்லும் வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
பயணிகள் தவிப்பு
குமரன் நினைவிடம் பகுதியில் கூட்டம் நடத்தும் போது, ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும் வாகனங்கள்; குமரன் நினைவிடம், ஜெய்வாபாய் பள்ளி, காதர்பேட்டை செல்வோர் சொல்ல முடியாத அவதிக்கு ஆளாகின்றனர். இது தவிர ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் கூட பயணிகள் நின்று பஸ் ஏறி இறங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
யூனியன் மில் ரோடு அகலமாக இருந்தாலும், நொய்யல் ஆற்றைக் கடந்து செல்லும் பாலங்களை அணுக இந்த ரோட்டைத்தான் வாகனங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
போராட்டங்களின் போது வெயில் தாக்குப்பிடிக்க முடியாமல் உடல் நலம் இல்லாதோரும், வயதானவர்களும் தடுமாறி நிழல் தேடி அலைவதையும் காண முடியும்.
இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க அரசியல் கட்சிகள் மற்றும்அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த திறந்த வெளி மைதானம் அல்லது திடல் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் பல்வேறு சிரமங்களை தடுக்கலாம். அசம்பாவிதங்களையும் தவிர்க்கலாம்.