/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகள் கொட்டும் மையங்களாக மாறிய குளங்கள்; தீர்வு காண நடவடிக்கை அவசியம்
/
கழிவுகள் கொட்டும் மையங்களாக மாறிய குளங்கள்; தீர்வு காண நடவடிக்கை அவசியம்
கழிவுகள் கொட்டும் மையங்களாக மாறிய குளங்கள்; தீர்வு காண நடவடிக்கை அவசியம்
கழிவுகள் கொட்டும் மையங்களாக மாறிய குளங்கள்; தீர்வு காண நடவடிக்கை அவசியம்
ADDED : நவ 01, 2024 10:04 PM

உடுமலை ; உடுமலை பகுதிகளில், பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ள குளங்களில், கழிவுகள், குப்பை கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதோடு, நேரடியாக கழிவு நீர் கலந்து வருவதால் மாசடைந்து வருகிறது.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழுள்ள குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது. இக்குளங்கள் வாயிலாக நேரடியாக, 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சுற்றுப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீராதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.
ஆண்டில் பெரும்பாலான மாதங்கள் நீர் நிரம்பியிருப்பதால், உள்நாட்டில் வலசை வரும் அரிய வகை பறவைகள், இக்குளங்களுக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஏழு குளங்கள் உள்ளன.
ஏழு குளங்களில், ஒட்டுக்குளம் உடுமலை நகரின் அருகில் அமைந்துள்ளது. செங்குளம், தினைக்குளம், செட்டிக்குளம் ஆகியவை பள்ளபாளையம், தளி, ஜல்லிபட்டி கிராமங்களின் அருகிலும், பெரியகுளம் போடிபட்டி அருகிலும் அமைந்துள்ளன.
இந்த குளங்களின் கரைகள், ஷட்டர் உள்ளிட்ட பகுதிகள், திறந்தவெளி 'பார்' ஆக மாறி விட்டன. காலி மதுபாட்டில் குவியலை தாண்டியே குளங்களுக்கு செல்ல முடியும். இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும், 'குடி' மகன்கள் குளத்தை விட்டுச்செல்வதில்லை.
தற்போது அனைத்து குளங்களிலும், பல டன், பிளாஸ்டிக் கழிவுகள், காலி மதுபாட்டில்கள் குவிந்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளங்களின் பாதுகாப்பில், அனைத்து துறையினரும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பெரிய குளம் மற்றும் குளத்தில் உபரி நீர் வெளியேறும் பகுதியில், சுற்றுப்பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளும், அருகிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து, எச்சில் இலை மற்றும் உணவுக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. நகரின் அருகிலுள்ள ஒட்டுக்குளத்தின் கரையில், கட்டுமான மற்றும் இதர கழிவுகளை இரவு நேரங்களில், கொட்டிச்செல்கின்றனர். இதைத்தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில், குளத்து கரையில் தடுப்புகள் அமைத்து, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
ஆனால், தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் டன் கணக்கில் கட்டட கழிவுகளை கொட்டியுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளும், குளம் முழுவதும் நிரம்பி கிடக்கிறது.
இதேபோல், செங்குளம் மற்றும் தினைக்குளத்தில், குடியிருப்புகளின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. இவ்வாறு, அனைத்து குளங்களின் நீர்த்தேக்க பரப்பு குறைந்து வருவதுடன், நீரும் மாசடைகிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை வரும் பறவைகளும் பாதிப்பதால், இயற்கை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.
நேரடி பாசன விவசாயிகள், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதே நிலை நீடித்தால், முக்கிய நீராதாரங்கள் மாயமாகி, பசுமையாய் காணப்படும் ஏழு குள பாசனப்பகுதி பசுமை இழக்கும்; அருகிலுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்.
எனவே, குளம், குட்டைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் குப்பை, கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்படுவதைத்தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.