UPDATED : நவ 14, 2026 05:27 PM
ADDED : நவ 14, 2026 05:24 PM

பல்லடம்: பல்லடம் அருகே சாலையோரத்தில் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளால், சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் – கரடிவாவி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதால், சாலையோர மின்கம்பிகள் தற்போது கைக்கு எட்டும் உயரத்தில் தொங்குகின்றன.
அருகிலேயே தரைமட்டப் பாலத்தின் தடுப்புச் சுவரும் உள்ளது. சிறுவர்கள் அதன் மீது ஏறினால், மின்கம்பிகளைத் தொடும் அபாயம் உள்ளது. சாலைப் பணிகளுக்கு முன்போ அல்லது பணிகள் முடிந்த பிறகோ மின்கம்பங்கள், கம்பிகளை உரிய உயரத்துக்கு மாற்றியமைத்திருக்க வேண்டும். ஆனால், அவை இன்னும் தாழ்வாகவே உள்ளன.
எனவே, விபத்து ஏற்படும் முன் மின்வாரியத்தினர் உடனடியாக மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
