/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பவர் டேபிள்' நிறுவனங்களின் போராட்டம் வாபஸ்
/
'பவர் டேபிள்' நிறுவனங்களின் போராட்டம் வாபஸ்
ADDED : நவ 20, 2025 03:07 AM
திருப்பூர்: கடந்த 2024 ஆண்டு கூலியை இந்தாண்டும் வழங்குவது என சுமூக தீர்வு ஏற்பட்டதால், பவர்டேபிள் நிறுவனங்களின், உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ஒப்பந்த கூலியை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக, பவர் டேபிள் நிறுவனங்கள், கடந்த, 7ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், வருவாய் இழப்பை தவிர்க்க, சுமூக பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டுமென, தொழிலாளர் வலியுறுத்தி வந்தனர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் (சைமா) சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், பொது செயலாளர் தாமோதரன், துணை தலைவர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலையில், பவர்டேபிள் சங்க நிர்வாகிகளுடன், சைமா சங்கத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், சுமூக முடிவு எட்டப்பட்டதால், போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து 'சைமா' பொதுசெயலாளர் தாமோதரன் கூறுகையில், ''தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த, 2024ம் ஆண்டு வழங்கிய கூலி உயர்வை, நடப்பு ஆண்டிலும் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 19ம் தேதி முதல் டெலிவரி எடுக்கும் 'கட்'டுகளுக்கும், 'டஜன்'களுக்கும் இந்தகூலி உயர்வு பொருந்தும். வேலை நிறுத்தம் இன்று முதல் திரும்பப்பெறுவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கூட்டுக்குழு அமைத்து, கூலி உயர்வு பெறுவதில் சிரமம் இருந்தால், அந்தந்த நிறுவனங்களுடன் பேசி தீர்வு காண்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பேச்சுவார்த்தையில், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர்நந்தகோபால், செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் நாகராஜ், உதவி செயலாளர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

