/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்
/
பிரதமர் மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்
பிரதமர் மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்
பிரதமர் மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்
ADDED : அக் 02, 2024 06:45 AM

திருப்பூர் : திருப்பூரில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
எளிய மக்கள் உயர் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக, மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (பி.எம்.ஜெ.ஏ.ஒய்.,) மருத்துவ காப்பீடு திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், கடந்த, 2018ம் ஆண்டு முதல், பி.எம்.ஜெ.ஏ.ஒய்., மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் - முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் இணைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான ஆண்டு விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணன் மகாராஜ், தேசிய நல குழும மாவட்ட திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் அகிலன் பேசுகையில், ''பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம், 1.20 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள அனைவரும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். குடும்ப உறுப்பினர் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம்.
திருப்பூர் மாவட்டத்தில், பத்து அரசு மருத்துவமனை, 34 தனியார் மருத்துவமனைகளில், காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். காப்பீடு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு, கலெக்டர் அலுவலக அறை எண் 3 ஐ நேரில் அணுகி விவரங்கள் பெறலாம்' என்றார்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பான வகையில் சிகிச்சை அளித்ததற்காக, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, பல்லடம் அரசு மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
திருப்பூரில், மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்தை, திருப்பூர் ரேவதி மருத்துவமனை சிறப்பாக செயல்படுத்தி, தொடர்ந்து விருது பெற்று வருகிறது.
மூன்றாவது முறையாக இந்தாண்டும் அம்மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது. ரேவதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்திக்கு, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் விருது வழங்கினார்.
மற்றொரு விருது, ஐ பவுண்டேசன் மருத்துவமனை நிர்வாகி ரவிக்கு வழங்கப்பட்டது. மருத்துவ காப்பீடு திட்ட ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஓவியம் தீட்டிய, ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவியர் பிரசாந்தினி, அக் ஷயா, தீபிகா, ஈஷா, ஹரிதா ஆகியோருக்கு நற்சான்று வழங்கப்பட்டது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்ற பயனாளிகள் ஐந்து பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக ஆறு பயனாளிகளுக்கு பி.எம்.ஜெ.ஏ.ஒய்., காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், பத்து அரசு மருத்துவமனை, 34 தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ மனைகளில், காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்