/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ் இயக்குவதில் சிக்கல்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ் இயக்குவதில் சிக்கல்
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ் இயக்குவதில் சிக்கல்
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ் இயக்குவதில் சிக்கல்
ADDED : ஜன 08, 2025 12:21 AM

திருப்பூர்; தென்மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து சேரும் கோவில்வழி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி, பார்க்கிங், வணிக வளாகம் கட்டும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது. கடந்த, 2023ல் துவங்கிய பணி, மந்த கதியில் நடந்து ஒருபுறத்தில் மட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.
வடபுற நுழைவு வாயில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், தென்புற நுழைவுவாயில் (ஆர்ச்) கட்டி முடிக்கப்பட்டு, மண் கொட்டி சமப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
இதனால், தற்காலிகமாக ெஷட்டுக்கு வெளியே வடக்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி, அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் போன்ற இருந்த இடம், 'வழியோர மோட்டல்' போல் குறுகி போய் விட்டது.
திருப்பூரில் மூன்று பஸ் ஸ்டாண்ட் இருந்த போதும், பண்டிகை நாட்களில் அதிக பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில், 70 சதவீத இடம் இல்லாத நிலையில், வடக்கு பகுதி ஓரத்தில் இருந்துதான் தற்காலிக பஸ் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் சிறப்பு பஸ்களை நிறுத்த இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரும், 10ம் தேதி இரவு துவங்கி, 13ம் தேதி வரையும், 16ம் தேதி இரவு துவங்கி, 19ம் தேதி வரையும் தொடர்ந்து, 80க்கும் அதிகமாக சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்க போக்குவரத்து கழகம் ஆயத்தமாகி வருகிறது.
பண்டிகைக்கு முன்பாக பஸ்கள் நிற்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு பின்புறமுள்ள இடத்தை தற்காலிகமாக பயன்படுத்த மாநகராட்சி ஒப்புதல் வழங்க வேண்டும்; அப்போது தான் நிலைமையை சமாளிக்க முடியும்.
தற்போதுள்ள இடத்தில் பஸ்களை நிறுத்தவும், வரிசையில் நின்று பயணிகள் பஸ் ஏறவும் முடியாத நிலை உள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கலுக்கு இரு நாட்கள் முன், நிச்சயம், 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் பயணிகள் வரை பஸ் ஏற வருவர்.
பயணிகள் நிற்க இடமில்லாத சூழல் நிலவுகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், பஸ்களை ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைத்து இயக்க முடியாது; 300 முதல், 400 கி.மீ., தொடர்ச்சியாக பயணித்து பஸ்கள் வருவதால், வந்த வுடனே அனுப்ப முடியாது. டிரைவர், நடத்துனருக்கும் சற்று ஓய்வு தர வேண்டும்.
எனவே, கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, தற்காலிக தெற்கு நுழைவு வாயில் வாயிலாக பஸ்கள் உள்ளே வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்று நாட்கள் இருப்பதால், தற்காலிக ஏற்பாடுகளை உடனடியாக மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம்,' என்றனர்.