/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோடு விரிவுபடுத்தாததால் சிக்கல்
/
சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோடு விரிவுபடுத்தாததால் சிக்கல்
சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோடு விரிவுபடுத்தாததால் சிக்கல்
சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோடு விரிவுபடுத்தாததால் சிக்கல்
ADDED : செப் 15, 2025 09:15 PM
உடுமலை; உடுமலை அருகே, சுற்றுலாத்தலங்களை இணைக்கும் ரோடு, நீண்ட காலமாக விரிவுபடுத்தப்படாமல் இருப்பதால், சுற்றுலா வாகனங்கள் நெரிசலில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் பொள்ளாச்சி ஆழியாறு மற்றும் உடுமலை திருமூர்த்திமலையாகும். பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணியர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், திருமூர்த்திமலை வர, பொள்ளாச்சி, உடுமலை நகரங்களை தவிர்த்து சுங்கம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி, ஜிலோபநாயக்கன்பாளையம் தளி வழியாக செல்லும் வழித்தடத்தில் செல்கின்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழநிக்கு செல்ல இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில், எரிசனம்பட்டி முதல் தளி வரையுள்ள 9 கி.மீ., ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோடு, குறிப்பிட்ட துாரம் மட்டும் விரிவுபடுத்தப்பட்டது; பிற பகுதிகளில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது.
விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரையை சந்தைப்படுத்த, இந்த ரோட்டில் சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு, சரக்கு வாகனங்கள் செல்லும் போது, பல கி.மீ., துாரத்திற்கு பிற வாகனங்கள் சரக்கு வாகனங்களின் பின்னால், அணிவகுத்து, செல்கின்றன.
விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் இந்த ரோட்டில், நெரிசலில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை முழுமையாக விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.