/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாக்குறுதிகள் அறிக்கையாக மட்டுமே இருக்க கூடாது'
/
'வாக்குறுதிகள் அறிக்கையாக மட்டுமே இருக்க கூடாது'
ADDED : செப் 16, 2025 07:06 AM

பல்லடம்: வாக்குறுதிகள் என்பது வெறும் தேர்தல் அறிக்கையாக மட்டுமே இருக்கக் கூடாது என, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பல்லடத்தில், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓட்டுக்களை கவரும் நோக்கில், அரசியல் கட்சியினர், வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில், 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்பட்ட திருப்பூர் மாநகராட்சி, தற்போது, குப்பைத்தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரதான கோரிக்கையான, ஆனைமலையாறு - - நல்லாறு திட்டத்தை தி.மு.க., அரசு முற்றிலும் மறந்து விட்டது.
விவசாய மின் இணைப்பு தருவதாக கூறி, நான்கு ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்வதற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியும், இன்று வரை தீர்வு ஏற்படவில்லை. கள்ளுக்கான அனுமதி, ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகம், நொய்யல் நதி பராமரிப்பு என, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே துாங்கி கொண்டுள்ளன. எனவே, வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்து விட்டு, கோரிக்கைகள் நிறைவேறியதாக கூறுவதால் எந்த பயனும் இல்லை.
தேர்தலுக்கு முன், தொழில் துறையினர், விவசாயிகளின் கருத்துக்களை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக கோரிக்கைகளை நிற்வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.