/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2025 11:52 PM

திருப்பூர்; குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்க கோரியும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வீட்டு மனை பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் துரைசாமி தலைமைவகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், பொருளாளர் பாலதண்டபாணி, இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
கோவில் மற்றும் வக்போர்டு நிலங்களில் குடியிருந்து வரும் மற்றும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை, வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசும் இந்து அறநிலையத்துறையும் கைவிட வேண்டும். இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி சட்டப்படி பட்டா, பத்திரம் பெற்றுள்ள நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்வதை கைவிட வேண்டும்.
அரசின் பல்வேறு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து, பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும். உபரி நிலங்களையும், தரிசு நிலங்களையும் நிலமற்ற மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும். பூமிதான நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டும்.
மாநிலம் முழுவதும் பட்டா இல்லாத 40 லட்சம் பேர் உள்ளனர் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு, கலெக்டரிடம் 1,400 மனுக்கள் அளிக்கப்பட்டன.