/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல் மண்டல பாசனத்திற்கு முழுமையாக நீர் வழங்குங்க! அணைகள், குளங்களுக்கு நீர் திறக்க எதிர்ப்பு
/
முதல் மண்டல பாசனத்திற்கு முழுமையாக நீர் வழங்குங்க! அணைகள், குளங்களுக்கு நீர் திறக்க எதிர்ப்பு
முதல் மண்டல பாசனத்திற்கு முழுமையாக நீர் வழங்குங்க! அணைகள், குளங்களுக்கு நீர் திறக்க எதிர்ப்பு
முதல் மண்டல பாசனத்திற்கு முழுமையாக நீர் வழங்குங்க! அணைகள், குளங்களுக்கு நீர் திறக்க எதிர்ப்பு
ADDED : டிச 12, 2025 06:24 AM
உடுமலை: பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு, ஜன., மாதம் நீர் திறக்க வேண்டிய நிலையில், பாசனத்தை பாதிக்கும் வகையில், உப்பாறு அணை, வட்டமலைக்கரை ஓடை, குளம், குட்டைகளுக்கு நீர் வழங்கக்கூடாது, என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில், இரு ஆண்டுக்கு ஒரு முறை, 135 நாட்கள் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, 4 மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டிய நிலையில், பிரதான கால்வாயில், இரு முறை ஏற்பட்ட உடைப்பு காரணமாக, வரும், 24ம் தேதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.
இதனால், முதல் மண்டல பாசனத்திற்கு, வரும், 2026 ஜன., 20க்கு பின் நீர் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக முதல் மண்டல பாசனம் கோடை காலத்தில் துவங்குவதால், முழுமையாக பாசன நீர் வழங்க முடிவதில்லை.
கடந்த முறை, திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, முதல் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்களுக்கு 2024 பிப்.,12 முதல், மே 22 வரை, நுாறு நாட்களுக்கு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி மட்டுமே நீர் வழங்கப்பட்டது.
வழக்கமாக முதல் மண்டல பாசன நிலங்களுக்கு, ஜன., மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன் நீர் திறக்கப்படும்.
இவ்வாறு திறந்தால் மட்டுமே, தை பட்டத்தில், மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், மற்ற பயிர்களும் சாகுபடி மேற்கொள்ள ஏற்ற பருவமாகும்.
இந்நிலையில், திட்டக்குழு தலைவர் மற்றும் பகிர்மானக் குழு தலைவர்கள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., பிரதான கால்வாயில், எந்நேரமும் உடையும் அபாயத்திலுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி மற்றும் உடுமலை கால்வாய், கிளைக்கால்வாய்கள், பகிர்மானக் கால்வாய்களைள துார்வார ரூ.10 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளளது.
மண்டல பாசனத்திற்கு முன், கால்வாய் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டால் மட்டுமே, குறித்த காலத்தில் முதல் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க முடியும். நடப்பு மாதத்தில், திருமூர்த்தி அணை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளில் ஓரளவு நீர் இருப்பு உள்ளதால், நடப்பாண்டு முதல் மண்டல பாசன நிலங்களுக்கு, 5 சுற்றுக்கள் நீர் கிடைக்கும்; இம்முறை பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம், என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், 4ம் மண்டல பாசன காலம், வரும், 24ம் தேதி நிறைவு பெற்றதும், பாசனம் அல்லாத வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைக்கு ஏற்கனவே வழங்கிய நீர் போக, மீதம், 60 சதவீதம் நீர் வழங்கி உப்பாறு அணையை நிரப்புதல் மற்றும் குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும், என தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்து, அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.
தற்போது, திருமூர்த்தி அணையிலிருந்து நீரை வழங்கினால், மீண்டும் நீர் சேமிப்பது மற்றும் பாசன கால்வாய்கள் சீரமைப்பு பணி துவங்க மாதக்கணக்கில் தாமதம் ஏற்படும். இதனால், முதல் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் திறப்பது கேள்விக்குறியாகும்.
அதுவும், 19- மாதங்களுக்குப்பின், நடப்பாண்டு, 5 -சுற்று தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தில் நீர் பங்கீடு, கால்வாய்கள் பராமரிப்பு, கோடை காலம் என பல சிக்கல்கள் உள்ள நிலையில், 4ம் மண்டல பாசனம் முடிந்ததும், சமீபத்தில் நீர் வழங்கிய உப்பாறு அணை, வட்ட மலைக்கரை அணை, குளம் குட்டைகளுக்கு நீர் வழங்குவது, பொருத்தமில்லாத மற்றும் சாத்தியமில்லாத கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றால், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், பல ஆயிரக்கணக்கான, பி.ஏ.பி., முதல் மண்டல பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
எனவே, 4ம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும், கால்வாய்களை சீரமைக்கும் பணியை உடனடியாக துவங்கி, ஜன., முதல் வாரத்தில், முதல் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும், என பி.ஏ.பி.,விவசாயிகள் வலியுறுத்தியுள்ளதோடு, முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

