/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-சேவை மையத்தில் பொதுமக்கள் தவிப்பு
/
இ-சேவை மையத்தில் பொதுமக்கள் தவிப்பு
ADDED : நவ 06, 2025 04:33 AM

அவிநாசி: அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ--சேவை மையத்தில் ஆதார் மையம் உள்ளது. தினமும், 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆதார் புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்து தருகின்றனர்.
சில மாதங்களாக அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிறப்பு ஆதார் சேவை மையம், ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இதற்காக அதிகாலை, 5:00 மணி முதலே பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்து பின், ஆதார் புதுப்பித்தும் புதியதாகவும் பெற்று சென்றனர். தற்போது ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் வேறொரு நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளனர். ஆனால் அந்நிறுவனத்தில் இருந்து ஆதார் சேவை பயன்பாட்டிற்கான 'சாப்ட்வேர்' மற்றும் கணினி உபகரணங்கள் இதுவரை வராததால், 1ம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் டோக்கன்கள் பெற பெயர்களை பதிவு செய்ய தினமும், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரள்கின்றனர். ஆனால், இருக்கும் ஒரு கம்ப்யூட்டர்., ஒரு ஊழியர் மட்டுமே கொண்டு ஆதார் பணிகள் நடைபெறுவதால், கால் கடுக்க பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வேலைக்கு செல்வோர் விடுப்பு எடுத்து கொண்டும், தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைத்து ஆதார் பதிவுக்கு வருகின்றனர். இதனால், அவர்களும் காத்திருந்து சோர்வடைகின்றனர்.
இது குறித்து அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் கூறியதாவது:
ஒரு தாலுகாவுக்கு ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தகவல் தெரிவித்து கூடுதலாக கம்ப்யூட்டர், ஆதார் கிட் மற்றும் ஊழியர் ஒருவர் வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் உள்ள தாலுகாவில் தனியார் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதித்துள்ளனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்களின் நலன் கருதி தனியார் இ-சேவை மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை காத்திருந்து தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் பொதுமக்கள் ஆதார் பதிவு மற்றும் மாற்றங்கள் செய்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

