/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பணியில் குழாய் உடைப்பு :பொதுமக்கள் போராட்டம்
/
சாலை பணியில் குழாய் உடைப்பு :பொதுமக்கள் போராட்டம்
ADDED : மார் 15, 2024 01:00 AM

திருப்பூர்;ரோடு விரிவாக்கப் பணியின் போது, குடிநீர் குழாய்கள் சேதமாகியது. இதனை கண்டித்து கவுன்சிலர் தலைமையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான காங்கயம் ரோடு விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணியின் போது, ரோட்டோரம் பதித்திருந்த குடிநீர் சப்ளை குழாய் நீண்ட துாரத்துக்கு சேதமாகியது.
இதனால், அப்பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உடைந்து போன குழாய்களை சரி செய்யாமல் நேற்று காலை மீண்டும் நெடுஞ்சாலை துறையினர் பணியை தொடர்ந்தனர். ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், கவுன்சிலர் கண்ணப்பன் தலைமையில் திரண்டனர்.
பணிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அலுவலர்கள், தெற்கு போலீசார் விரைந்தனர். நீண்ட நேரம் பேச்சு நடந்தது. சேதப்படுத்தப்பட்ட குழாய்கள் சரி செய்து, குடிநீர் வழங்க உறுதி அளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கவுன்சிலர் கண்ணப்பன் கூறியதாவது:கடந்த, 3 மாதத்துக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு, பாதிக்கிறது. பணி செய்யும் ஒப்பந்ததாரர் தான் இது போன்ற பிரச்னைக்கு பொறுப்பேற்க வேண்டும். பல முறை அறிவுறுத்தியும் அலட்சியமாக செயல்படுகின்றனர். குழாய் உடைப்பு சரி செய்யாவிட்டால், தீவிர போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

