/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் உடற்கல்வி பயிற்சியாளர் இல்லை; முடங்கும் மாணவியரின் விளையாட்டு திறன்
/
அரசு பள்ளியில் உடற்கல்வி பயிற்சியாளர் இல்லை; முடங்கும் மாணவியரின் விளையாட்டு திறன்
அரசு பள்ளியில் உடற்கல்வி பயிற்சியாளர் இல்லை; முடங்கும் மாணவியரின் விளையாட்டு திறன்
அரசு பள்ளியில் உடற்கல்வி பயிற்சியாளர் இல்லை; முடங்கும் மாணவியரின் விளையாட்டு திறன்
ADDED : அக் 17, 2024 10:21 PM

உடுமலை : உடுமலையில் பெண்களுக்கான அரசு பள்ளியில், விளையாட்டு பயிற்சிக்கென அடிப்படை வசதிகள், முறையான பயிற்சியாளர் இல்லாததால், திறமை இருந்தும் முடங்கும் அவலத்துக்கு மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர்.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.
பெண்களுக்கான அரசுப்பள்ளியாக இருப்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல கனவுகளுடன் மாணவியர் இங்கு வருகின்றனர். கல்வி, இணை செயல்பாடுகள் என, பல்வேறு பிரிவுகளில் பள்ளியின் பெயர் சிறப்பாக இருப்பினும், விளையாட்டு போட்டிகளின் பங்களிப்பில் மிகவும் பின்தங்கியுள்ளது.
இப்பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவியருக்கு, நிரந்தரமான உடற்கல்வி ஆசிரியர் என ஒருவரும் இல்லை.
தற்காலிக அடிப்படையில், மாற்றுப்பணி (டெப்டேஷன்) முறையில் வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் மட்டுமே, ஒரு ஆசிரியர் உடற்கல்வி பாடப்பிரிவுக்கென நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமென பல கனவுகளுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, அதற்கான எந்த அடிப்படை வசதிகளும் பள்ளியில் இல்லாமல் இருப்பது, அவர்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.
குறுமையம், வட்டாரம் என பல விளையாட்டு போட்டிகள் உடுமலை சுற்றுப்பகுதியில் நடக்கிறது. இவற்றில் இப்பள்ளி குழந்தைகளின் பங்கேற்பு குறைவாகவும், சில நேரங்களில் இல்லாமலும் உள்ளது.
மாணவியர் அவர்களாகவே விளையாடுவதற்கு, முறையான மைதான வசதியும் பள்ளியில் இல்லை.மழைநீர் தேங்கும் வகையிலும், குண்டும் குழியுமாகவும், செடிகள் வளர்ந்துமாக பள்ளி மைதானம் உள்ளது. இட வசதி இருப்பினும், அதை மைதானமாக பயன்படுத்துவதற்கு போதிய நடவடிக்கை இல்லை.
பெற்றோர் கூறியதாவது:
எங்களின் குழந்தைகள் படிப்பில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெற்றோருக்கும் உள்ளது.
அதே நேரம் அவர்கள் ஒரு விளையாட்டில் திறன்களை பெற்றிருந்தும் அவற்றை ஊக்குவிப்பதற்கும், பயிற்சி வழங்குவதற்கும் பள்ளியில் வசதியில்லாமல் இருப்பது ஏமாற்றத்தை விட வேதனையாக உள்ளது.
பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் பெற்றோர், குழந்தைகளை தொகை செலுத்தி தனியார் நிறுவனங்களிலும் பயிற்சிக்கு அனுப்ப முடியாது. விளையாட்டாக இருப்பினும், அரசு பள்ளிகளை நம்பிதான் குழந்தைகளை விடுகிறோம்.
ஆனால் அதற்கும் இங்கு வழியில்லாமல் உள்ளது. பெண் குழந்தைகளும் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படை வசதிகள் பள்ளிகளில் தேவை. அரசு தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.