ADDED : அக் 29, 2025 11:49 PM

உடுமலை: கொடி கட்டும் முறையை பின்பற்றுவதால், பருவமழை காலத்திலும் உடுமலை பகுதியில் தரமான தக்காளியை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர்.
உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சீசனிலும், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டாலும், பருவமழை காலத்தில், தரமான தக்காளி உற்பத்தி சவாலானதாக இருந்தது.
மழைக்காலத்தில், செடி சாய்வது உள்ளிட்ட காரணங்களால், தக்காளியின் தரம் பாதித்து, மகசூலும் குறையும். இப்பிரச்னைக்கு தீர்வாக, வடகிழக்கு பருவமழை சீசனில், கொடி கட்டும் முறையை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். செடியின் அருகில் குச்சிகளை நட்டு, அதில், தக்காளி செடிகளை இழுத்து கட்டுகின்றனர்.
இதனால், அதிக ஈரப்பதம் இருந்தாலும், செடி மற்றும் தக்காளி பாதிப்பதில்லை.கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்தாலும், உற்பத்தியும், தரமும் பாதிக்காமல் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
தற்போது, உடுமலை சந்தையில், 14 கிலோ கொண்ட பெட்டி, அதிகபட்சமாக 350 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

