/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைநீர் சேகரிப்பு மாயமானது ஏனோ!
/
மழைநீர் சேகரிப்பு மாயமானது ஏனோ!
ADDED : நவ 01, 2024 12:53 AM

திருப்பூரில் இல்லங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் போன்றவற்றில், மழைநீர் சேகரிப்பு என்பது மாயமாகியிருக்கிறது. சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறுகிறது திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள். வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
'திருப்பூரை பொறுத்தவரை அடர்த்தியாக அமைந்துவிட்ட வீடுகள்; இடைவெளி இல்லாமல் உருவாக்கப்பட்ட கட்டடங்களில் மழைநீர் சேகரிக்க வாய்ப்பு இல்லாமல், கட்டடங்களில் விழும் அத்தனை மழைநீரும், சாலையில் தான் சங்கமிக்கிறது; வெள்ள சேதம் ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணம்' என்கின்றனர், திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர்.
மழைநீர் கட்டமைப்புக்குமானியம் வழங்க வேண்டும்
கடந்த ஆறு ஆண்டுகளாக தன் வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வரும் தன்னார்வலர் 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் பாலு கூறியதாவது:
கடந்த, 6 ஆண்டாக என் வீட்டில் மழைநீர் சேகரித்து, அந்த நீரை தான் குடிப்பது முதல் சமையல் செய்வது வரை, அனைத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். மொட்டை மாடியில் விழும் மழைநீரை, நிலத்தடியில் தொட்டி அமைத்து, அதில் சேகரித்து, வெளிச்சம், காற்று புகாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்; ஐந்தாண்டு வரை கூட அந்த நீரை பயன்படுத்தலாம்.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த மானியம் வழங்கினால், மக்கள் மத்தியில் திட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
நிரம்பிய குளம்
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், என்.எஸ்.எஸ்., அலகு-2 மாணவர்களால் கடந்த, ஆறு ஆண்டுக்கு முன் குளம் வெட்டப்பட்டு, மழைநீர் சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குளம் ஒவ்வொரு மழையின் போதும் நிரம்பி ததும்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருக்கிறது.
கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது:
மாணவர்கள் வெட்டிய குளத்தை அவ்வப்போது, மாணவர்களே சுத்தம் செயவர். விளைவாக, மழையின் போது குளம் நிரம்பும். சமீபத்தில் பெய்த மழையில் குளம் முழுக்க நிரம்பி, கரை உடையும் அளவுக்கு வெள்ளம் வெளியேறியது; இதுபோன்று நிகழ்வது, இதுவே முதல்முறை. குளம் அருகேயுள்ள 'போர்வெல்' தண்ணீர் தான், கல்லுாரி மாணவ, மாணவியரின் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது; தடையின்றி நிலத்தடி நீர் கிடைக்க, குளத்தில் நிரம்பும் நீர் முக்கிய காரணமாக உள்ளது.
உறிஞ்சு குழிக்கு ஊக்குவிப்பு
கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், புதிதாக கட்டப்படும் கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே வரி விதிப்பு ஏற்றுக்கொள்ளுமாறு, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு பதிலாக, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சுகுழி அமைக்க ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம், குழாயில், பொதுமக்கள் நீர்பிடிக்கும் போது வெளியேறும் உதிரி நீர் மற்றும் உபரி நீர், உறிஞ்சுகுழி வழியாக நிலத்தடிக்குள் சென்றுவிடும். இதன் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பது, அரசின் எண்ணம்.