/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயுத பூஜைக்கு தயார்! திருப்பூரில் பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
/
ஆயுத பூஜைக்கு தயார்! திருப்பூரில் பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
ஆயுத பூஜைக்கு தயார்! திருப்பூரில் பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
ஆயுத பூஜைக்கு தயார்! திருப்பூரில் பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
ADDED : செப் 30, 2025 11:57 PM

திருப்பூர்; சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் நகர வீதிகளில் நேற்று, பழங்கள், கரும்பு, வாழைக்கன்று உள்பட பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளான இன்று, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும்; நாளை, விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. வீடு மற்றும் கோவில்களில் சரஸ்வதி பூஜையும்; பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங் என அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள், உணவகங்கள், மளிகை, நகை கடைகள், பர்னிச்சர், மொபைல் போன் கடைகள், பத்திரக்கடை, உள்பட எல்லா நிறுவனங்களிலும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
நேற்று முன்தினம் முதலே, நிறுவனங்கள், கடைகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று, சாணத்தால் வாசல் மெழுகி, கோலமிட்டுள்ளனர். நிறுவனங்களில் இன்று காலை, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் நகர கடை வீதிகள் நேற்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டன. பெருமாள் கோவில் அருகே பூமார்க்கெட் வீதி மற்றும் திருப்பூர் - தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோடு என அனைத்து சாலைகளிலும், பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மட்டுமின்றி குறு வியாபாரிகள், தள்ளுவண்டி கடை அமைத்தும், ரோட்டோரம் தார்பாய் விரித்தும், பழம், பூ, தேங்காய் போன்ற பூஜைக்கு தேவையான பொருட்கள்; தோரணம் தொங்க விடுவதற்கு மாவிலை விற்பனை செய்யப்பட்டது.
சரஸ்வதி பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செவ்வந்தி, அரளி மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, சம்பங்கி ஆகிய பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதேபோல, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, பூசணி ஆகிய விற்பனையும் பரபரப்பாக இருந்தது.
கரும்பு வந்தாச்சு...
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையில், சுவாமி படங்கள் வைக்கப்பட்டு, முழு கரும்பு, வாழை மரங்கள் கட்டப்படும். நிறுவனங்கள், வீடுகளின் நுழைவாயில், சரக்கு வாகனங்கள், பஸ்களில் வாழைக்கன்றுகள் கட்டப்படும். இதற்காக, ரோட்டோரம் கரும்பு மற்றும் வாழைக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.