ADDED : நவ 03, 2025 12:21 AM

திருப்பூர்:''எழுத்தாளரின் இயல்பை விருது பறிக்கிறது. பொறுப்புடன் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடுகிறது'' என்று 'கூத்தொன்று கூடிற்று' சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் லட்சுமிஹர் பேசினார்.
திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது பெற்ற விருதாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற 'ஒற்றை சிறகு ஓவியா' நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன், யுவ புரஸ்கார் விருது பெற்ற 'கூத்தொன்று கூடிற்று' சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் லட்சுமிஹர் ஆகியோருக்கு பதியம் இலக்கிய அமைப்பு சார்பில், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது. குமார் வரவேற்றார். உமர்கயான் தலைமை தாங்கினார்.
தாய்த்தமிழ்ப் பள்ளி தங்கராசு, தோழமை இல்லம் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை கோகிலா 'ஒற்றைச் சிறகு ஓவியா' நுால் அறிமுகம் மற்றும் சம்சுதீன் ஹீரா 'கூத்தொன்று கூடிற்று' சிறுகதைத் தொகுப்பின் அறிமுகத்தையும் வழங்கினர். சிறப்பு விருந்தினராக திருப்பூர் சக்தி அறக்கட்டளை மிருதுளா நடராஜன், நவீன மனிதர்கள் அறக்கட்டளை பாரதி சுப்பராயன் கலந்து கொண்டு விருதாளர்களை பாராட்டி பேசினர்.
லட்சுமிஹர் ('கூத்தொன்று கூடிற்று' சிறுகதை தொகுப்பு ஆசிரியர்) பேசியதாவது:
விருது ஒரு எழுத்தாளரின் இயல்பை பறிக்கிறது. ஒரு விருது, இனி பொறுப்புடன் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடுகிறது. என்னைப் பொறுத்த வரை, அடுத்தடுத்த வாசகரிடையே எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இந்த விருதை பார்க்கிறேன். எட்டு ஆண்டுகளாக படைப்பாளியாக பயணிக்கிறேன். இதுவரை 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளை 4 தொகுப்பாக எழுதியுள்ளேன். எல்லோருக்கும் சமூகத்தில் தென்படும் தோற்றத்திற்கு பின், ஒரு முகம் இருக்கும். அதை சுட்டிக்காட்ட படைப்பு கைகொடுத்தது. இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு, நமக்கான படைப்பாய் இது இருக்கும்.
இவ்வாறு, லட்சுமிஹர் பேசினார்.
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கயிறு சிறுகதை நாடகமாக காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை பதியம் இலக்கிய அமைப்பை சேர்ந்த பாரதிவாசன் ஒருங்கிணைத்தார்.
--
லட்சுமிஹர்
விஷ்ணுபுரம் சரவணன்

