/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிசர்வ் வங்கி அவசர கால நிவாரணம்: ஜவுளி தொழில்துறையினர் நிம்மதி பெருமூச்சு
/
ரிசர்வ் வங்கி அவசர கால நிவாரணம்: ஜவுளி தொழில்துறையினர் நிம்மதி பெருமூச்சு
ரிசர்வ் வங்கி அவசர கால நிவாரணம்: ஜவுளி தொழில்துறையினர் நிம்மதி பெருமூச்சு
ரிசர்வ் வங்கி அவசர கால நிவாரணம்: ஜவுளி தொழில்துறையினர் நிம்மதி பெருமூச்சு
ADDED : நவ 16, 2025 01:04 AM
திருப்பூர்: அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக, ஜவுளி உட்பட, அனைத்து ஏற்றுமதி வர்த்தகத்திலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதிக்காக பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவது சவாலாக மாறியது.
தாக்கத்தை குறைக்க, மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியான அவசரகால நிவாரண சலுகைகளை வழங்கியுள்ளது.ஏற்றுமதியான தேதியில் இருந்து, ஒன்பது மாதத்துக்குள், அதற்கான கடனை கட்டி முடிக்க வேண்டும்.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளுக்கான தொகையை பெற, ஒன்பது மாதங்களாக இருந்த அவகாசம். 15 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு அனுப்பும் அவகாசம், முன்பணம் பெற்ற நாளில் இருந்து, ஓராண்டாக இருந்தது,மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூலதனம் மற்றும் முதலீட்டு கடனாக பெறப்பட்ட, செப். 1 முதல் டிச. 31ம் தேதி வரை செலுத்த வேண்டிய, நிலுவையில் உள்ள கடனை திருப்பி செலுத்தவும், வட்டி வசூலிக்கவும் தற்காலிகமாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் ஏற்றுமதிக்கு பிந்தைய கடன்களுக்கு, அதிகபட்ச கடன் காலம், 270 நாட்களாக இருந்தது, 450 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது; இச்சலுகை, 2026 மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
ஆக. 31ம் தேதி அல்லது அதற்கு முன் பெற்ற 'பேக்கிங் கிரெடிட்' கடன்களை மறுசீரமைப்பு செய்யலாம். பொதுவாக, ஏற்றுமதி உற்பத்தி செலவுகளுக்காக, 'பேக்கிங் கிரெடிட்' என்ற கடன் வாங்கும் போது, பதிவு செய்த நாட்டின் வர்த்தகருக்கு மட்டுமே பொருள் விற்கப்பட வேண்டும். தற்போது, அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், அனுப்ப முடியாத சரக்குகளை உள்நாட்டில் விற்று சமாளிக்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, அவசரகால நிவாரணம் வழங்குவது போல், மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடைமுறை சவால்களை இதன் மூலம் சமாளிக்க முடியும்.
அமெரிக்க வரி உயர்வால் பாதித்த ஏற்றுமதியாளருக்கு, ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் அமைந்துள்ளது,'' என்றார்.

