/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் அறுவடை துவக்கம்: இயந்திரங்கள் பற்றாக்குறை
/
நெல் அறுவடை துவக்கம்: இயந்திரங்கள் பற்றாக்குறை
ADDED : நவ 02, 2025 08:32 PM
உடுமலை: உடுமலை அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது; நெல் அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் தருவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அமராவதி அணை, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, நிலங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.
அறுவடைக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், பெரும்பாலும், இயந்திரங்கள் வாயிலாக நெல் அறுவடை செய்யப்படுகிறது.
தற்போது ஒரே சமயத்தில், 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை துவங்கியுள்ளதால், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவ மழையும் துவங்கியுள்ளதால், மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பாதிக்கும் நிலை உள்ளது.
இதனால், விரைவில் இப்பகுதிகளில் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண் பொறியியல் துறை வாயிலாக, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் அறுவடைக்கு தேவையான இயந்திரங்களை தருவிக்கவும், குறைந்த வாடகையில் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

