ADDED : ஆக 28, 2025 11:33 PM

திருப்பூர், ;சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விதிகளை மீறி தார் ரோடு போடும் பணி மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. ''இப்பணியில் எந்த விதிமீறலும் இல்லை'' எனக் கூறுகிறார் பேரூராட்சி தலைவர்.
சாமளாபுரம் பேரூராட்சியில், தற்போது கருகம் பாளையம், ராம் நகர் ஆகிய பகுதிகளில் குறுக்கு வீதிகளில் தார் ரோடு போடும் பணி நடக்கிறது.
இதில் ராம் நகர் தெற்கு வீதியில் தார் ரோடு போடும் பணியில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர்  கலெக்டர் குறை கேட்பு கூட்டத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: இந்த ரோட்டில் விதி களுக்குப் புறம்பாக, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றாமல் தார் ரோடு போடும் பணி நடக்கிறது.  இந்த ரோடு பேரூராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்படாமல் தார் ரோடு அமைக்கப் படுகிறது.
இந்த ரோட்டில் தான் பேரூராட்சி தலைவர் வீடு உள்ளது. இதனால், அவர் தனது வசதிக்காக ரோடு போடும் பணியை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரூராட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது: இப்பகுதியில் நான் இடம் வாங்கி வீடு கட்டி பல ஆண்டுகளாகிறது. எனது வீடு என்பதால் ரோடு போடுவதாக இருந்தால், பதவிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும்?
இங்கு நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் சார்பில் நிதி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, கருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 கோடி ரூபாய் மதிப்பில் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த ரோட்டில் உள்ள தனியார் தனது இடத்துக்கு பாதுகாப்பு கருதி கம்பி வேலி அவரது இடத்தில் அமைத்துள்ளார். புகார்தாரர் என்னுடன் தனிப்பட்ட முறையிலான பிரச்னையை மனதில் வைத்து இது போல் புகார் தெரிவித்துள்ளார்.
ரோடு போடும் பணியில் எந்த விதிமீறலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

