/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைகள் வெள்ளக்காடு; பல்லாங்குழியாலே சீர்கேடு
/
சாலைகள் வெள்ளக்காடு; பல்லாங்குழியாலே சீர்கேடு
ADDED : அக் 16, 2024 10:46 PM

கட்டமைப்பு இல்லை
தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து பொறியாளர் சங்கங்களின் கூட்ட மைப்பின், 7வது மண்டல (கோவை, திருப்பூர், நீலகிரி) தலைவர்ஸ்டாலின் பாரதி:
மழை வெள்ள பாதிப்புக்கு கார ணம், சாலையில் மழைநீர் தேக்கம் தான். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல இடங்களில் போடப்பட்ட சாலைகளில் மழைநீர் வடிகால் முழுமைப்பெறாமல் உள்ளது.
ஒரு வீதி, தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் போது, அந்த வடிகால் பிரதான சாலையில் உள்ள வடிகாலுடன் (டிஸ்போஸல் பாய்ன்ட்) இணையும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் மழைநீர் வீதி, தெரு மட்டுமின்றி, பிரதான சாலைகளில் தேங்காமல் வழிந்தோடி செல்லும்; அத்தகைய கட்டமைப்பு திருப்பூரில் இல்லை.
பிரதான சாலைகளை ஒட்டிய பல கிராம, நகர்ப்புறங்களில் குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் இருந்த இடம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டடங்களாக உருமாறிவிட்டன; பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும் விட்டன. இதனால் பெருமழையின் போது, அங்கு சென்று சேர வேண்டிய மழைநீர், திசை மாறி, பிரதான சாலைகளில் பெருக்கெடுத்து சாலையை சேதப்படுத்துகிறது.
உதாரணமாக, கல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால், 15 அடி அகலம் வரை இருந்தது; தற்போது, அந்த வடிகால் 'சுருங்கி', பல இடங்களில், வெறும், 2 அடி மட்டுமே உள்ளது.
வாய்க்காலில் ஓடும் மழைநீர், கல்லுாரி சாலையில் பெருக்கெடுத்து, பல மணி நேரம் தேங்கி நிற்கிறது. எனவே, நீர் வழித்தடங்கள், குளம், குட்டைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திருப்பூரின் வடக்கு, தெற்கை இணைப்பது ரயில் தண்டவாளம்; இங்கு, வாகனங்கள் கடந்து செல்வதற்கேற்ப இரட்டைக்கண் பாலம் இருந்தது; தற்போது அந்த பாலம் பயன்பாட்டில் இல்லை.
ரயில்வே ஸ்டேஷன் ஒட்டி டூவீலர் செல்லும் வகையில் ஒரு பாலம் இருந்தது; அதுவும் தற்போது மூடப்பட்டுவிட்டது. ஐயப்பன் கோவில் சாலை, குறுகலாக இருப்பதால் ஒரு வழிப்பாதையாக மாற்றி விட்டனர். எனவே, தேவையான இடங்களில் சுரங்க மற்றும் மேம்பாலங்கள் அமைத்தால், மழைக்காலங்களில் ஏற்படும் நெரிசலையும் தவிர்க்கலாம்.
வடிகால் வேண்டும்
செந்தில்குமார், தலைவர், திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம்:
திருப்பூர் நகர, ஊரக மற்றும் பிரதான நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவது நொய்யல் அல்லது நல்லாற்றின் வழியாக மட்டுமே. 30 ஆண்டுக்கு முன், இந்த ஆறுகளை இணைக்கும் மழைநீர் வடிகால் தடங்களை, தற்போது இழந்திருக்கிறோம்; அல்லது அவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தான், மழைக்காலங்களில், சாலைகள் வெள்ளக்காடாக மாறுகின்றன; குண்டும், குழியும் ஏற்படுகின்றன.
பிற நகரங்களை ஒப்பிடுகையில் திருப்பூரின் கட்டமைப்பு, ஒழுங்கற்ற நிலையில் தான் உள்ளது. இதற்கு காரணம் சாலை, அதுசார்ந்த மழைநீர் வடிகால் கட்டமைப்பு சிறப்பாக இல்லை. அருகேயுள்ள ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களில் பிரதான சாலைகள் அகலமாகவும், மழைநீர் வழிந்தோடி செல்லும் வகையிலும் உள்ளது. ஆனால், திருப்பூரில், 'அகல சாலை' என வரையறுக்கப்பட்டவையே குறுகலாக தான் உள்ளன.
மழையின் போது சென்னையில் நிலவும் அதே பிரச்னையை தான், தற்போது திருப்பூரும் எதிர்கொண்டுள்ளது. நேற்று முன்தினம், 5 செ.மீ., மழை மட்டுமே பெய்தது; இருப்பினும், சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
எனவே, நொய்யல், நல்லாறுக்கு மழைநீரை கொண்டு செல்லும் வடிகால்களை அதிகப்படுத்த வேண்டும். திருப்பூர் நகரம் சமவெளியாக இல்லை; மேடு பள்ளங்கள் நிறைந்திருப்பதால், சரியான பொறியியல் கட்டமைப்பு உருவாக்க வேண்டும்; அதற்கான ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்.
அளவற்ற ஆக்கிரமிப்பு
சண்முகசுந்தரம், உறுப்பினர், சாலை பாதுகாப்புக்குழு:
திருப்பூர் பல்லடம் ரோடு, அவிநாசி, காங்கயம் ரோடு மற்றும் நகராட்சி சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என, கடந்த, 1960 முதலே அரசுக்கு கோரிக்கை வைத்துவருகிறோம்; ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அதன் விளைவாக, சாலைகள் சுருங்கின.
மக்கள் தொகையும் பெருகியதால், மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது.திருப்பூரில் பல கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள், ரோடு பராமரிப்பு, குழாய் பதிப்பு என பல காரணங்களால் மீண்டும் மீண்டும் தோண்டப்பட்டு, நிதி வீணடிக்கப்பட்டது; சாலையும் உருக்குலைந்திருக்கிறது.
தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை விரிவுபடுத்தி, மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே, மழைக்கால பாதிப்பில் இருந்து தப்பிக்கமுடியும். நெடுஞ்சாலை, பொதுப்பணி, மின்வாரியம், மாநகராட்சி நிர்வாகம் என துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், பல இடங்களில் சாலை பராமரிப்பு, புதுப்பிப்பு பணிகள் சிறப்புற இல்லை.
எந்த துறை அதிகாரிகளிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை. நேர்மையாக பணியாற்றக் கூடிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் மாநகர மற்றும் பிரதான சாலை கட்டமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.