/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிணையம் இல்லாமல் ரூ.3 கோடி கடனுதவி! எம்.எஸ்.எம்.இ. அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்
/
பிணையம் இல்லாமல் ரூ.3 கோடி கடனுதவி! எம்.எஸ்.எம்.இ. அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்
பிணையம் இல்லாமல் ரூ.3 கோடி கடனுதவி! எம்.எஸ்.எம்.இ. அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்
பிணையம் இல்லாமல் ரூ.3 கோடி கடனுதவி! எம்.எஸ்.எம்.இ. அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்
ADDED : நவ 08, 2025 12:59 AM

திருப்பூர்: மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை சார்பில், திருப்பூர் 'கிளஸ்டர்' அளவிலான, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், எம்.எஸ்.எம்.இ., இயக்குனர் வினாம்ரா மிஸ்ரா, இணை இயக்குனர் சுரேஷ் பாபு ஆகியோர், உற்பத்தி செலவுகளை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தலாம், போட்டித்திறனை அதிகரிக்க செய்யலாம் என்று கேட்டறிந்தனர்.
எம்.எஸ்.எம்.இ., கோவை உதவி இயக்குனர் கயல்விழி வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், 'லகு உத்யோக் பாரதி', 'சிம்கா' மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று, தங்களது துறைசார்ந்த விவரங்கள் குறித்து பேசினர். கோரிக்கைள், மனுவாகவும் வழங்கப்பட்டது.
தொழில் அமைப்பினரின் ஒவ்வொரு கோரிக்கையும், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் அடிப்படையில், புதிய நிதி கொள்கை உருவாக்கப்படும்; அதன் மூல மாக, புதிய திட்டங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று, எம்.எஸ்.எம்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுகள் அவசியம் குமார் துரைசாமி, இணை செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:
திருப்பூரில், 1.13 லட்சம் எம்.எஸ்.எம்.இ., பதிவு செய்யப்பட்டுள்ளன. பனியன் நிறுவனம் மட்டுமல்லாது, அரிசி ஆலை, எண்ணெய் ஆலைகளும், நெசவு ஆலைகளும் உள்ளன. பின்னலாடை உற்பத்தி, எட்டு வகையான தனித்துவ செயல்முறைகளை உள்ளடக்கியது.
திருப்பூரில், 2,500 ஏற்றுமதியாளர்களும், 20 ஆயிரம் தனி 'யூனிட்'களும் உள்ளன. மொத்த ஏற்றுமதியாளரில், 3 சதவீதம் பேர் மட்டுமே, அனைத்து தொழில்பிரிவுகளுடன் இயங்கி வருகின்றனர். திருப்பூர் போன்ற தொழில்நகரை உருவாக்குவது, பல மாநிலங்களில் குறிக்கோளாக இருக்கிறது. இத்தொழிலில், 10 லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
எம்.எஸ்.எம்.இ. திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளி தொடர்கிறது. கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; மொத்த கடன் தொகை மட்டுமே உயர்ந்து வருகிறது. 'பேசல் -3' விதிமுறைகள், கண்டிப்பாக பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையே இடைவெளி அதிகம் உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு, கல்லுாரி ஆய்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்; அப்போதுதான், புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படும்.
45 நாளில் 'பேமண்ட்' விவேகானந்தன்,தலைவர், சிம்கா:
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, பிணைய மில்லாமல், மூன்று கோடி ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு, பில் கொடுத்த தேதியில் இருந்து, 45 நாட்களில் பேமென்ட் திட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும். தாழ்வழுத்த மின்சார நுகர்வோரும் காற்றாலை மற்றும் சோலார் மின்சார கொள்முதலுக்கு அனுமதிக்க வேண்டும்
பொது பயன்பாட்டு மைய இயந்திரங்களை மேம்படுத்த மானியம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. நடைமுறையை மேலும் எளிதாக்க வேண்டும். தரச்சான்று பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்க வேண்டும்.
மானியம் வேண்டும் மாதேஸ்வரன், பொருளாளர், சாய ஆலை உரிமையாளர் சங்கம்:
சாய ஆலைகளின் உற்பத்தி செலவை குறைக்க, மத்திய அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும். சாயம் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளின் செலவை குறைக்க வேண்டும். நிதி மற்றும் மூலப்பொருள் செலவை குறைக்க வேண்டும்.
தரச்சான்று பெறும் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் சாய ஆலைகளில் குவிந்துள்ள 'மிக்சர் சால்ட்' அப்புறப்படுத்த தனி 'பைலட்' திட்டம் தயாரித்து, தகுந்த நிதியுதவி வழங்க வேண்டும். சுத்திகரிப்பில், மின்கட்டண செலவு அதிகரித்து வருவதால், சோலார் கட்டமைப்பு நிறுவ மானியம் வழங்க வேண்டும்.
'போர்ட்டல்' வசதி ராமன் அழகிய மணவாளன், மாவட்ட துணை தலைவர், 'லகு உத்யோக் பாரதி':
நாடு முழுவதும் தொழில் அமைப்புகளை சந்தித்து, கோரிக்கையை பெற்று வருகின்றனர்; இது, அடுத்த பட்ஜெட்டில் எதிரொலிக்கும். குறு, சிறு நிறுவனங்கள் திருப்பூரில் அதிகம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்துக்கு மேம்பட வேண்டும்; அதற்கு அரசு தரப்பு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும்.
உற்பத்தி மேம்பாடு, உற்பத்தி தர மேம்பாடு, மார்க்கெட்டிங் மேம்பாடு உதவிகள் அவசியம். மார்க்கெட் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டவும் பிரத்யேக 'போர்ட்டல்' வசதி செய்து கொடுக்க வேண்டும். திருப்பூரில், 1.30 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உதயம் பதிவு செய்துள்ளன.
பத்துக்கும் அதிகமான தொழிலாளர் உள்ள தொழிற்சாலைக்கு, தொழிற்சாலை உரிமம் பெற வேண்டும்; அதில், பல்வேறு சிக்கல் இருப்பதால், அந்நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

