/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.3.25 கோடி கையாடல்; கூட்டுறவு வங்கி முற்றுகை
/
ரூ.3.25 கோடி கையாடல்; கூட்டுறவு வங்கி முற்றுகை
ADDED : டிச 12, 2025 06:28 AM

அவிநாசி: பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், டிபாசிட் செய்த வாடிக்கையாளர்கள், தங்கள் தொகையை திருப்பி வழங்க கேட்டு, சங்கத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கே.2046) செயல்படுகிறது. இதில், சங்க செயலாளராக, வடிவேல் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த, 2024 மார்ச் 4ல், டூவீலரில் வடிவேல் சென்ற போது, விபத்து ஏற்பட்டு, விடுப்பில் இருந்தார். அப்போது, கூட்டுறவு கடன் சங்கத்தில் பணத்தை டிபாசிட் செய்த சிலர், வட்டி தொகை பெற சங்கத்துக்கு சென்றனர். ஆனால், வாடிக்கையாளர் பெயரில் எந்விதமான டெபாசிட் தொகை இல்லாததும் தெரியவந்ததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். புகாரை தொடர்ந்து மாவட்ட கூட்டுறவு வங்கியிலிருந்து வந்த அதிகாரிகள் குழு கணக்குகளை தணிக்கை செய்தது.
அதில், சேமிப்பு கணக்குகள் மற்றும் டெபாசிட்களிலிருந்து, மொத்தம், 3.25 கோடி ரூபாய் வரை கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், கடந்த 2024 ஏப். மாதம், கூட்டுறவு சங்கம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
விசாரணையின் அடிப்படையில், பழங்கரை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருந்த தனபால் (தற்போது அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்), செயலாளர் வடிவேல், காசாளர் பரணிதரன், அலுவலர் ஜின்னா, அருந்ததி (தற்போது பெரியாயிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் பணியில் உள்ளார்) ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக விசா ரணையில் தெரியவந்தது. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
முன்னாள் தலைவராக இருந்த தனபாலின் சொத்துக்கள் ஏலம் விடப்போவதாக கூட்டுறவு சங்கம், நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், தனபால் தரப்பில் தடையாணை பெறப்பட்டதால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் நேற்று காலை, பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு டெபாசிட் பணத்தை உடனே வழங்க கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த, அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, திருப்பூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பிரபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் டெபாசிட் தொகையை கூட்டுறவு கடன் சங்கம் திருப்பி செலுத்தும் காலம் வரை உரிய வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில், நல்ல தீர்வு கிடைக்கும் என உறுதியளித்தார். இதனால், சமாதானம் அடைந்த வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

