/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமப்புற ரோடு மோசம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
கிராமப்புற ரோடு மோசம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 05, 2025 12:19 AM

சேவூர்: சேவூர், புளியம்பட்டி ரோட்டில் இருந்து சந்தையப்பாளையம் வரை உள்ள ரோடு மிக மோசமான நிலையில் உள்ளதால், டூவீலர்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர்.
சேவூர் ஊராட்சி ஜே.பி. நகர், புளியம்பட்டி ரோட்டில் இருந்து சந்தையப்பாளையம் வரை உள்ள இணைப்பு சாலையில் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதியில், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக, புளியம்பட்டி ரோட்டில் இருந்து சந்தையப்பாளையம் வரை உள்ள இணைப்பு சாலை மிகவும் மோசம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால், மிகவும் கரடு முரடான சாலையாக மாறியுள்ள நிலையில் இரவு நேரங்களில் நடந்தும், டூவீலரில் வருபவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஒரு சில சமயங்களில் கற்கள் இடறி டூவீலர் சறுக்கி ஓட்டுபவர் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால், பல இடங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி நின்றதால்,பொதுமக்கள் பயணிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
மிக தாழ்வான பகுதியாக இணைப்பு சாலை உள்ளதால் புளியம்பட்டி ரோட்டில் இருந்து வழிந்து வரும் மழை நீரும், அதே போல ஜி.ஹெச். செல்லும் ரோட்டில் இருந்து வழிந்து வரும் நீரும் சந்தையப்பாளையம் செல்லும் பகுதிக்கு அடித்து வருவதால் பெருமளவு மழை நீர் ரோட்டின் இருபுறமும் தேங்கி நிற்கிறது.
இதனால் ரோடுகள் விரைவில் சேதம் அடைய காரணம் ஆகிறது. எனவே, உடனடியாக புளியம்பட்டி ரோட்டில் இருந்து சந்தையப்பாளையம் வரை செல்லும் ரோட்டை தரமான முறையில் புதுப்பித்து மழை நீர் கால்வாய் வடிகால் ஏற்படுத்தி தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

