/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு
/
பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு
ADDED : செப் 18, 2025 11:29 PM
திருப்பூர்; பனியன் தொழிலாளருக்கு மாதம், 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க கேட்டு, சி.ஐ.டி.யு., சார்பில், பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக, சி.ஐ.டி.யு., பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சம்பத், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பனியன் தொழிலாளர் அனைவருக்கும், நடப்பாண்டு அக். 1ம் தேதி முதல், எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், மாதம், 18 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.
பீஸ் ரேட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, நடைமுறை சம்பளத்திலிருந்து 90 சதவீதம் உயர்வு வழங்கவேண்டும். 1936ம் ஆண்டு விலைவாசி குறியீட்டு எண் 15 ஆயிரத்துக்கு, மாதம் ஐந்தாயிரம் ரூபாயும், அதற்குமேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் 0.50 காசு உயர்த்தி வழங்கவேண்டும்.
தற்போது வழங்கப்பட்டுவரும் 25 ரூபாய் பயணப்படியை, 50 ரூபாயாக உயர்த்தவேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம், 3 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகைப்படி, 100 தொழிலாளருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள், தொழிலாளர் குடும்பத்துடன் வசிக்க குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
கூடுதல் பணி நேரத்துக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 'பேட்டா'விலிருந்து, 100 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 2,500 ரூபாய், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 5 ஆயிரம் ரூபாய்; உயர்கல்விக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இதுதவிர, 250 தொழிலாளருக்கு மேல் பணிபுரியும் பனியன் நிறுவனங்களில், கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் உருவாக்கவேண்டும்.
அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகள் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.