/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காதர்பேட்டையில் விற்பனை சூடுபிடித்தது
/
காதர்பேட்டையில் விற்பனை சூடுபிடித்தது
ADDED : அக் 13, 2025 01:09 AM

திருப்பூர்:திருப்பூரில் தயாராகும் பின்னலாடைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி பரபரப்பாக நடந்து வந்தது. கடந்த ஆக., மாதத்தில் இருந்து வர்த்தக விசாரணை அதிகரித்தது; கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான ஆர்டர் கிடைத்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன்:
நுால் விலை சீராக இருப்பதால், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும் சீராக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், தீபாவளி ஆர்டர் அதிகம் கிடைத்தது; உற்பத்தியை நிறைவு செய்து அனுப்பியுள்ளோம். தமிழகம் முழுவதும் திருப்பூரில் உற்பத்தியான உள்ளாடைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
காதர்பேட்டை மொத்த வியாபாரிகள்: கடந்த ஆண்டை காட்டிலும் காதர்பேட்டையில் விற்பனை களைகட்டியிருக்கிறது.
மொத்த விற்பனையுடன், சில்லரை விற்பனை பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் வரை வியாபாரம் பரபரப்பாக நடக்கும்.
குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது ஷபி:
மும்பை, சூரத் மார்க்கெட்டுக்கு உற்பத்தி செய்யும், குறு, சிறு உற்பத்தியாளர்களுக்கு இந்தாண்டும் வர்த்தகம் குறைவுதான். வடமாநிலங்களில் இருந்து, பின்னல் துணிகளை வாங்கி உற்பத்தி செய்கிறோம். அடிக்கடி 'டிசைன்' மாற்றிவிடுகின்றனர். வடமாநில உற்பத்தியாளருடன் போட்டியிட முடிவதில்லை.
தீபாவளி ஆர்டர் சிறு வியாபாரிகளிடம் இருந்து குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது. திருப்பூரில் ஒருங்கிணைந்த பின்னலாடை வணிக வளாகம் வந்தால் மட்டுமே, ஆடைகளை காட்சிப்படுத்தி, வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும்.