/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
6 மாதமாக ஊதியம் வழங்கல! துாய்மை பணியாளர்கள் வேதனை
/
6 மாதமாக ஊதியம் வழங்கல! துாய்மை பணியாளர்கள் வேதனை
ADDED : ஆக 14, 2025 08:39 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் பணிசெய்யும் துாய்மைப்பணியாளர்களுக்கு, ஆறு மாதமாக ஊதியம்வழங்கப்படாததால், பணிக்கு வர மறுக்கின்றனர்.
துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணிகளை மேற்கொள்ள,'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துவக்கப்பள்ளியில் பணிசெய்வோருக்கு, ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளியில், 1,500 ரூபாய், உயர்நிலைக்கு, இரண்டாயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளி பணியாளர்களுக்கு, 2,500 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மட்டுமே, துவக்கம் முதல் மேல்நிலை வரை, 258 அரசு பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்வது, பள்ளி சுற்றுப்பகுதிகளை துாய்மையாக பராமரிப்பதற்கும் இப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஊதியம் ஏற்கனவே மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள துாய்மைப்பணியாளர்களுக்கு, ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் துாய்மைப்பணிகளை மேற்கொள்ள அவர்கள்மறுக்கின்றனர்.
அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: துாய்மைப்பணியாளர்களுக்கு ஏற்கனவே ஊதியம் குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் தான் கூடுதலாக வழங்குகிறோம். ஆனால் தற்போது அரசு வழங்கும் ஊதியமும் கால தாமதமாகவே வழங்கப்படுகிறது.
இதனால் பள்ளிகளில் தொடர்ந்து துாய்மைப்பணிகள் பாதிக்கப்படுகிறது. கழிவறைகளை எப்போதும் துாய்மையாக வைத்திருக்க, கல்வித்துறை தீவிர கண்காணிப்புடன் உத்தரவு போடுகிறது.
ஆனால் அப்பணியாளர்களின் ஊதிய பிரச்னைக்கு செவி சாய்ப்பதில்லை. இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் துாய்மைப்பணிகள் பாதிக்காத வகையில், அவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன், நிலுவையில் இருப்பதையும் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.