/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்க! மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்க! மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்க! மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்க! மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2025 11:50 PM
- நமது நிருபர் -
மக்களின் மனுக்களை, துறை சார்ந்த அரசு அதிகாரிகள், விரைந்து பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. மாதக்கணக்கில் அரசு அலுவலக படியேறியும் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்களில் மனு அளிக்கின்றனர்.
ஒவ்வொரு வார குறைகேட்பு கூட்டத்திலும், 400 முதல் 600 மனுக்கள் வரை பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது.
அரசு அதிகாரிகள் சிலரோ, குறைகேட்பு கூட்டத்தில் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதில்லை. மனுதாரருக்கு பதிலளிக்காமல், பல நாட்கள், மாதங்கள் வரை நிலுவையில் வைத்துவிடுகின்றனர்.
ஆய்வுக்கூட்டங்களில் நிலுவை மனுக்கள் எண்ணிக்கை அதிகம் இருக்க கூடாது என்பதற்காக, மனு ஏற்கப்பட்டது, மனு நிராகரிக்கப்பட்டது என பதிலளித்து, மனுக்களை முடித்து விடுகின்றனர்.
கடந்த, 13ம் தேதி நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தில், பொதுமக்களால் அளிக்கப்பட்ட, 2,158 மனுக்கள் பல்வேறு அரசு துறையினரிடம் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. இவற்றில், ஒன்று முதல் மூன்று மாதங்களான 367 மனுக்கள், 15 நாட்களான, 1038 மனுக்கள், 16 முதல் 30 நாட்களுக்கு உட்பட்ட, 558 மனுக்கள் உள்ளன.
3 முதல் 6 மாதம் வரையிலான, 119 மனுக்களும், ஆறு மாதத்துக்கு மேல் ஓராண்டு வரையிலான, 59 மனுக்கள், ஓராண்டை கடந்த, 17 மனுக்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனு அளித்து பல நாட்களாகியும், துறை சார்ந்த அதிகாரிகள் உரிய பரிசீலனை கூட செய்யாமல் மனுவை தள்ளுபடி செய்வது; நிராகரிப்பது, காலதாமதப்படுத்துவதால், பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுகிறது.
குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தால் நிச்சயம், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே மக்கள் மனு அளிக்கின்றனர்.
அரசு இயந்திரம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது, அதிகாரிகளின் கடமை.
மக்களின் மனுக்களை, துறை சார்ந்த அரசு அதிகாரிகள், விரைந்து பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே குறைகளை கேட்கும் கூட்டமாக அல்லாமல், குறைகளை தீர்த்துவைக்கும் கூட்டமாக மாறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.