/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலை சேர்க்கையில் அறிவியல் அதிகம்; மாணவர்கள் போட்டா போட்டி
/
மேல்நிலை சேர்க்கையில் அறிவியல் அதிகம்; மாணவர்கள் போட்டா போட்டி
மேல்நிலை சேர்க்கையில் அறிவியல் அதிகம்; மாணவர்கள் போட்டா போட்டி
மேல்நிலை சேர்க்கையில் அறிவியல் அதிகம்; மாணவர்கள் போட்டா போட்டி
ADDED : மே 18, 2025 10:18 PM
உடுமலை ; மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பிரிவு பாடத்தை தேர்ந்தெடுப்பதில், மீண்டும் மாணவர்களிடம் போட்டா போட்டி நிலை ஆரம்பமாகியுள்ளது.
உடுமலையில், அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் 22, 23 தனியார் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையும் துவங்கியுள்ளது. மேல்நிலை வகுப்புகளில், கலை மற்றும் அறிவியல் இரண்டு பிரிவுகளில் மாணவர்கள் சேர்கின்றனர்.
முன்பு, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் முதல் விருப்பம், அறிவியல் பாடப்பிரிவாகவே இருந்தது. அதிலும், பொறியியல் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ் மவுஸ் அதிகமாக இருக்கும்.
பல பள்ளிகளில், மதிப்பெண் குறைவாக இருக்கும் மாணவர்களும், அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஈடுபாட்டினால், பல பள்ளிகளை சுற்றி அடித்து இடம் பெறுவர்.
பொறியியல் துறையில் வேலைவாய்ப்பின்மை காரணமாக, மாணவர்கள் கலைப்பிரிவு பாடங்களை அதிகம் தேர்ந்தெடுக்க முன்வந்தனர்.
சுழற்சி முறையில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளும், ஒவ்வொரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில், கடந்த இரண்டாண்டுகளாக மீண்டும் அறிவியல் பிரிவு முதன்மை பெற்றுள்ளது.
மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணக்கு பிரிவு பாடங்களை தேர்ந்தெடுக்க, போட்டி போட துவங்கியுள்ளனர்.
பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள், அரசுத்துறை, மற்றும் வங்கிப்பணிகள் என பல்வேறு கோணங்களில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் இருப்பதால், அறிவியல் பாடங்களுக்கே தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், மாணவர் சேர்க்கை துவங்கிய இரண்டு நாட்களில், பெரும்பான்மையான மாணவர்கள் அறிவியல் பிரிவையே தேர்ந்தெடுத்து வருகின்றனர்.